Published : 11 Jul 2022 11:26 AM
Last Updated : 11 Jul 2022 11:26 AM

'நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்' - உயர் நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் 

சென்னை: கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்று அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கட்சி பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். மேலும் பொதுக் குழு நடத்த எந்த வித தடையும் விதிக்கவில்லை.

இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழு நடத்தவில்லை என்றால் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை.

2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாட்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையிம் நீதிமன்றத்தை நாடுவது துரதிருஷ்டவசமானது.

பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.

இவ்வாறு உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x