Published : 11 Jul 2022 10:05 AM
Last Updated : 11 Jul 2022 10:05 AM
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்..
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் காலை 9.15 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. சரியாக 9.25 மணிக்கு செயற்குழு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் சென்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக்குழு கூட்டத்தை நடத்தித்தர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இந்த தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT