Last Updated : 11 May, 2016 04:27 PM

 

Published : 11 May 2016 04:27 PM
Last Updated : 11 May 2016 04:27 PM

திமுக, பாமக, மநகூ போட்டி போட்டு பிரச்சாரம்: காட்பாடி தொகுதியில் காணாமல் போன அதிமுக

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாமக, மநகூ உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் அதிமுக வேட்பாளர் அப்புவை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது என அதிமுக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 2,973 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்ஆர்கே.அப்புவை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தோற்கடித்தார். இந்நிலையில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்ஆர்கே.அப்பு 2-வது முறை யாக போட்டியிடுகிறார். திமுக வேட் பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே தொகுதி முழுவதும் துரை முருகன் பெயரை எழுதி, கிராமம் முழுவதும் திமுகவினர் முதல் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

காட்பாடி தொகுதியைப் பொருத்தவரை, நகர் பகுதிகளை விட கிராமப் பகுதிகளில் விழும் ஓட்டுகள்தான் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும். காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் துரைமுருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, ஒவ்வொரு கிராமத் திலும் செல்வாக்குள்ள நபர்களை அழைத்துப் பேசுகிறார். கடந்த முறையை போல் இல்லாமல், இந்ததேர்தலில் துரைமுருகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என திமுகவினர் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

திமுக நிலைமை இப்படி இருக்க, அதிமுக தரப்பில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

இது குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘‘அதிமுக வேட்பாளர் அப்பு மீது எங்கள் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆனால், கட்சியினரிடம் வேட்பாளருக்கு சுமூக உறவு இல்லை. இது வேட்பாளருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. திமுக, பாமக சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 2 முறை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. ஆனால், அதிமுக சார்பில் ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காட்பாடியில் நடிகர் ஆனந்தராஜ் மட்டுமே அப்புவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்துள்ளார். மற்ற நட்சத்திரப் பேச்சாளர்களை முறை யாக அழைக்கவில்லை.

இதுமட்டுமின்றி காட்பாடி தொகுதி முழுவதும் திமுக கொடி பறக்கிறது. அதிமுக கொடியை தேடினால் கூட பார்க்க முடிய வில்லை. சட்டப்பேரவைத் தேர் தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மூத்த நிர்வாகிகளை அனுசரித்துப் போனால் மட்டுமே அதிமுக வேட்பாளர் அப்புவுக்கு நல்லது’’ என எச்சரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x