Last Updated : 13 May, 2016 04:39 PM

 

Published : 13 May 2016 04:39 PM
Last Updated : 13 May 2016 04:39 PM

கோவை - கவுண்டம்பாளையத்தில் வெற்றி யாருக்கு?

கோவையின் பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம், மறுசீரமைப்பின்போது தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் தொகுதிகளிலிருந்து சில பகுதிகளையும், மாநகராட்சியில் இணைந்த கவுண்டம்பாளையம், துடியலூர், காளப்பட்டி ஆகிய பகுதிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டது.

தற்போதையை நிலவரப்படி இத் தொகுதியில் 2,05,445 ஆண்களும், 2,04,541 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 46 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 32 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

2-வது முறையாக அதிமுக சார்பில் வி.சி.ஆறுக்குட்டியும், திமுக சார்பில் ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.ராமமூர்த்தியும், பாஜக சார்பில் ஆர்.நந்தகுமாரும், பாமக சார்பில் ஆ.தங்கவேல் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பொன்கவுசல்யாவும் போட்டியிடுகின்றனர்.

மிகப்பெரிய தொகுதியாக மட்டும் இல்லாமல், அதிக போட்டி நிலவும் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. சிட்டிங் எம்எல்ஏ ஆறுக்குட்டி, தொகுதிக்குள் தான் செல்லாத பல இடங்களுக்கும் இப்போது நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். அதிமுக தொண்டர்களுக்கு வேண்டியதை செய்து பணியாற்றவும் வைக்கிறார்.

திமுக வேட்பாளர் பையாக்கவுண்டர் திமுகவில் இணைவதற்கு முன்பாக, சுயேச்சையாகவே 2 முறை காளப்பட்டி பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். எளிதில் அணுகும் முறை, எளிமை உள்ளிட்ட காரணங்களும், மாற்றம் தேவை என்ற எண்ணமும் திமுகவை முன்னோக்கி இழுத்துச் செல்கிறது.

சிபிஎம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வி.ராமமூர்த்தி சின்னவேடம்பட்டி பேரூராட்சித் தலைவராக இருந்தவர். தற்போது மாநகராட்சி கவுன்சிலராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் என்பதால் மக்கள் நலக் கூட்டணியினர் சோர்வில்லாமல் உழைக்கின்றனர்.

பாஜக சார்பில் போட்டியிடும் ஆர்.நந்தகுமார் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர். மேயர் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற வகையில் மக்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த தேர்தலிலும் இங்கு பாஜக போட்டியிட்டு 2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

இத் தொகுதியில் வெள்ளக்கிணறு, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சின்னவேடம்பட்டி பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நாயக்கர் சமூகம், தடாகம், 24 வீரபாண்டி, பன்னிமடை, தாளியூர் பகுதிகளில் ஒக்கலிக கவுடர் சமூகம் பெரும்பான்மையாக உள்ளது.

முக்கிய மூன்று கட்சி வேட்பாளர்களும் கவுண்டர் சமூகத்தவராக இருப்பதால் அச் சமூக வாக்குகளை மூவருமே பிரிக்க ஏனைய சமூகத்தவர்களை கவர்பவர் எவரோ, எந்தக் கட்சியோ, எந்த பிரச்சாரமோ அக்கட்சி வேட்பாளரே வெற்றி கொள்வார் என்ற சூழ்நிலை தொகுதியில் உள்ளது. இந்த விஷயங்களில் முதல் இரண்டு வேட்பாளர்களுமே முதலிடத்தில் உள்ளனர்.

சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு, நீர் வழித்தடங்களில் மணல் கொள்ளை, வன விலங்கு ஊடுருவல், ஆனைகட்டி வரை நீண்டு தொடரும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், விமான நிலைய விரிவாக்கம், சிறு, குறு, தொழில் நிறுவன வளர்ச்சி, மாநகராட்சியின் இணைப்புப் பகுதிகளில் வளர்ச்சிப் பணி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் நடப்பு ஆளுங்கட்சி எம்எல்ஏ தீர்க்காத பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மலைக் கிராமங்கள் வரை சாலை வசதியை விரிவுபடுத்தியது, விலையில்லா பொருட்களை பரவலாக கொண்டு சேர்த்தது உள்ளிட்டவை அவருக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.

ஆக, இருவருக்குமே சரியான போட்டிதான். மற்றவர்கள் மற்ற இடங்களுக்கான போட்டியில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x