Last Updated : 10 Jul, 2022 05:15 PM

 

Published : 10 Jul 2022 05:15 PM
Last Updated : 10 Jul 2022 05:15 PM

'நிதி தராமல் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்கிறார்கள்' - பாஜகவை சாடும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது என்றும் கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜக அமைச்சர்கள் செய்கின்றனர் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வளர்ச்சியில் மோடி அரசு அக்கறையோடு இருக்கிறது. புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுகின்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது. 2016-ல் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகள் நடைபெற்றது. மத்திய அமைச்சர் கூறும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியதாகும். அதற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

பயிர் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுக்கும் திட்டம் ஆகியவை புதுச்சேரிக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் உண்டு. ஆனால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரிக்கு மட்டும் தனியாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடிக்கு சலுகை கொடுத்துள்ளது போல் பேசியுள்ளார். மத்திய அரசு கடந்த ஓராண்டாக ஒரு பைசா கூட அதிகமாக புதுச்சேரிக்கு நிதி கொடுக்கவில்லை. ஆகவே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தவறான தகவல்களை கூறி புதுச்சேரி மக்களை திசை திருப்ப வேண்டாம்.

இந்த ரூ.3 ஆயிரம் கோடி திட்டத்தில் புதுச்சேரிக்கு இதுவரை ரூ.850 கோடிதான் கிடைத்துள்ளது. புதுச்சேரிக்கு சிறப்பு நிதி கொடுப்போம் என்று பிரதமர் வாக்குறுதி கொடுத்தார். வியாபாரத்தை பெருக்குவோம், கல்வியில் நவீன மயத்தை கொண்டு வருவோம், ஆன்மிக நகரமாக்குவோம், சுற்றுலாவை மேம்படுத்துவோம் என்று கூறிய திட்டங்களுக்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பாஜக தலைவர், அக்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசையை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரியில் கிடப்பில் உள்ளன. அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதை பார்க்கும்போது, எனக்கு விந்தையாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறதா? அல்லது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வரை சந்தித்து எம்எல்ஏக்கள் கூறலாம். அல்லது ஆளுநரிடம் கூறலாம்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு அமைச்சர்கள் பாஜக தலைவருடன் சென்று திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை. ஆகவே ஆளுநர் தலையிட வேண்டும் என்று கூறினால், அந்த இரு அமைச்சர்களும் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்களா? முதல்வர் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? அமைச்சர்களே புகார் கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. இதைவிட கேலிகூத்தான விஷயம் எந்த மாநிலத்திலும் நடைபெறாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம். புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லையென்றால் இரு அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வாருங்கள். ஏன் அமைச்சரவையில் இருக்கிறீர்கள். நீங்கள் போய் ஆளுநரிடம் புகார் கூறுவது என்பது முதல்வரை கலங்கப்படுத்தும் வேலை. கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை அமைச்சர்கள் செய்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது உட்கட்சி விவகாரம். அது சம்பந்தமாக எந்த கருத்தையும் கூற மாட்டேன். நேற்று நடந்த கட்சி கூட்டம் கூட அமைதியாகதான் நடந்தது. கடந்த ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனை ஆட்சி அல்ல. மக்களுக்கு வேதனையான ஆட்சி. புதுவையில் தற்போது பினாமி ஆட்சி நடக்கிறது. ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர். இந்த ஆட்சி ஒரு குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x