Published : 10 Jul 2022 03:05 PM
Last Updated : 10 Jul 2022 03:05 PM
சென்னை: உட்புற சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே சென்னை மாநகராட்சியின் சார்பில் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மநாகராட்சியில் 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு) ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய தனியார் நிறுவனத்தின் சார்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய தனியார் நிறுவனத்தின் சார்பில் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 வாகனங்கள் பேருந்து சாலைகளில் மட்டும் தூய்மை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து சாலைகளுடன் கூடுதலாக மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT