Published : 10 Jul 2022 04:26 AM
Last Updated : 10 Jul 2022 04:26 AM

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரத்தில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதன் காரணமாக வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. (உள்படம்) கார்த்தி சிதம்பரம்.படம்: ம.பிரபு

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 2-வது முறையாக நேற்று சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.

கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் மான்சா நகரில் நிறுவப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டம், சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் (செப்கோ) என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

இதற்காக, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு சீன தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாகத் தரப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மே 17-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததால், அவரது வீட்டில் ஓர் அறையை மட்டும் சிபிஐ அதிகாரிகள் திறக்காமல் சென்றுவிட்டனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் சேர்த்திருந்ததால், சோதனை முடிந்த மறுநாளே அவரைக் கைது செய்தனர்.

கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, வெளிநாட்டில் இருந்து திரும்பிய உடன், மே மாதம் 26-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் 7 பேர், நேற்று மீண்டும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். திறக்கப்படாமல் இருந்த கார்த்தி சிதம்பரத்தின் அறையைத் திறந்து, சோதனை நடத்தினர். 3 மணிநேரம் நடந்த சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும், சிபிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x