Published : 09 Jul 2022 06:02 PM
Last Updated : 09 Jul 2022 06:02 PM

காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம்: அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: "வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு யானை தாக்க பலியாகியுள்ளனர். காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாமல் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது. அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறை அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஆரோட்டு பாறை செல்வபுரத்தைச் சேர்ந்த விவசாயி நாதன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு யானை தாக்க பலியாகியுள்ளனர். குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருகின்றன.

கிராம மக்களின் உடைமைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் வசித்து வருவதோடு, காட்டு யானை தாக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.

காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாமல் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது. அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறை அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காட்டு யானை தாக்கி பலியான விவசாயி நாதனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

காட்டு யானை தாக்குதலால் தொடரும் உயிர்பலியை எதிர்த்து மக்கள் வீதியில் வந்து போராடும் நிலையை கண்கூடாக பார்க்கமுடிவதாகவும், எனவே மக்கள் போராட்டத்தை கருத்தில் கொண்டு காட்டு யானை தாக்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x