Published : 08 Jul 2022 09:00 PM
Last Updated : 08 Jul 2022 09:00 PM

கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: தமிழகம் தேர்வானது எப்படி?

தமிகத்தில் உள்ள கடல் பகுதியில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2030-ம் ஆண்டுக்குள் 140 கிகாவாட் திறன் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கடல் பரப்பின் எண்ணிக்கை கொண்டு கடல் காற்றாலைகள் மூலம் 174 கிகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2 மாநிலங்கள்: இந்த கடல் காற்றாலைகள் அமைக்க இந்தியாவில் 2 நகரங்களில் மட்டும்தான் சாத்தியக்கூறு உள்ளது என்று முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

கடலில் அதிக அளவு காற்று வீசும் என்பதால் அதிக கடல் பரப்பு கொண்ட தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்கள் இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

தமிழகம்: இந்த திட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் கடல் காற்றாலைகள் மூலம் 4 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க விரைவில் மத்திய அரசு டெண்டர் கோர உள்ளது. இதன்படி 2022-23ம் ஆண்டில் இருந்து தொடங்கி ஆண்டுக்கு 4 கிகா வாட் மின்சாரம் தயார் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2029-2030 வாக்கில் இது ஆண்டுக்கு 5 கிகா வாட் வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி: அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் 4 கிகா வாட் மின்சாரம் தயாரிப்பதற்கான காற்றாலைகளை கடலில் நிறுவதற்கான டெண்டர் கோரடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், தனுஷ்கோடியில் 350 கோடி ரூபாயில் கடல் காற்றாலை ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கடலில் தலா, 8 மெகா வாட் திறனில் இரு காற்றாலைகளை நிறுவி, பரிசோதிக்க சென்னையில் உள்ள மத்திய காற்றாலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எப்படி சாத்தியம்? - ஆனால் இதில் பல சவால்கள் உள்ளன. கடலில் அனைத்து இடங்களிலும் காற்றாலைகள் அமைத்து விட முடியாது. காற்றாலைகள் தாங்கி நிற்பது பைல் பவுண்டேஷன் என்ற அமைப்புதான். இந்த பைல் பவுண்டேஷன் அமைப்பை எல்லா திட்டத்திலும் அமைத்து விட முடியாது. எனவே கடலில் பாறைகள் உள்ள இடத்தில்தான் இதை அமைக்க முடியும்.

மேலும் காற்றாலைகள் அதிக தொலைவில் அமைத்தால் மின்சாரத்தை கொண்டு வருவதில் அதிக செலவு ஏற்படலாம். எனவே, கடற்கரைக்கு அருகில் பாறை மாதிரி தரை உள்ள பகுதிகளில், எப்போதும் காற்று வீசிக் கொண்டே உள்ள பகுதியில்தான் இதை அமைக்க முடியும். இதற்கு அடுத்தபடியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தரைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு கடலுக்கு உள்ளே துணை மின் நிலையம் அமைத்து அதில் இருந்து உயர் அழுத்த கேபிள்கள் மூலம் கரைக்கு மின்சாரத்தை கொண்டு வரலாம்.

இந்நிலையில், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு சமீபத்தில் ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கடல் காற்றாலைகளை பார்வையிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ”கரையில் இருந்து 50 கி.மீ தொலைவில் கடலில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. காற்றாலை அமைக்க, 50 கி.மீ தூரத்திற்கு கேபிள் அமைக்கும் செலவு, ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு உள்ளிட்ட தகவல்களை கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதனை முதல்வரிடம் காண்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x