Last Updated : 31 May, 2016 01:54 PM

 

Published : 31 May 2016 01:54 PM
Last Updated : 31 May 2016 01:54 PM

‘கோவை மாநகராட்சி இணையதளம் முடங்கியதா?’ - பாதுகாப்பில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களும், அதில் 100 வார்டுகளும் உள்ளன. தமிழகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் ஒன்றாக கோவை மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நிர்வாக வேலைப்பளுவைக் குறைக்கவும் கோவை மாநகராட்சியில் ஆன்லைன் சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, கட்டட அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பது, புகார்களைத் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட சேவைகளுக்கு மாநகராட்சி இணையதளத்தையே (www.ccmc.gov.in) பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். மாநகராட்சியின் நகரமைப்பு, பொறியியல் பிரிவு, கல்வி, பொது சுகாதாரம், வருவாய், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களும், ஆணையாளர் முதல் வார்டு கவுன்சிலர் வரையிலான தகவல்களும், தமிழக அரசின் இதர இ - சேவைகளும் மாநகராட்சி இணையளத்தில் கிடைப்பதால் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதனால் இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக கோவை மாநகராட்சியின் இணையதளம் பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணையதளப் பக்கத்துக்குச் செல்லும்போது, அந்த இணையதளம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது, அதையும் மீறி உள்ளே சென்றால், பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்திகள் வருகின்றன என்கின்றனர் பொதுமக்கள்.

காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் கூறும்போது, ‘கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் ஏராளமான பயனுள்ள தகவல்களும், நிர்வாகத்தை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. நம்பகத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்கான கடந்த 2012-ல் இந்தியாவிலேயே 2-வது சிறந்த மாநகராட்சி இணையதளம் என்ற விருதை கோவை மாநகராட்சி இணையதளம் பெற்றிருக்கிறது. அதில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன் மூலம் இயக்கும்போது ஒரு விதமான எச்சரிக்கைத் தகவலும், கணினி மூலம் வேறு விதமான எச்சரிக்கைத் தகவலும் வருவதால், இணைய பக்கத்துக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது. மீறி உள்ளே சென்றாலும் கூட, அதில் பாதுகாப்பில்லை என்ற எச்சரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் வரி செலுத்துவது போன்ற பண பரிவர்த்தனைகள் நடப்பதால், உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, ‘மாநகராட்சி இணையதளத்தின் பாதுகாப்புச் சான்றிதழ் புதுப்பிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் நுழையும்போது எச்சரிக்கை போல வரும் அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதைத் தவிர்த்துவிட்டு இணையதளத்துக்குள் செல்லலாம். கோவை மாநகராட்சி இணையதளம் முழு பாதுகாப்போடு தான் இருக்கிறது. இரண்டொரு நாட்களில் இப் பணிகள் முழுமையடையும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x