Published : 08 Jul 2022 12:12 PM
Last Updated : 08 Jul 2022 12:12 PM

'மதுரையை உங்களைப்போல் ஸ்மார்ட்டாக மாற்றுங்கள்' - மாநகராட்சி ஆணையருக்கு செல்லூர் ராஜூ கோரிக்கை

மதுரை; ‘‘நீங்க இளமையாக ஸ்மார்ட்டாக, எளிமையாக இருக்கிறீர்கள், உங்களைப்போல் மதுரை மாநகராட்சியை மாற்றுங்கள்’’ என்று மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று காலை 9.30 மணியளவில் அதிமுக கவுன்சிலர்கள் 15 பேருடன் மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கை சந்தித்து மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை பட்டிலிட்டு மனு வழங்கினார். மனு கொடுத்த செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி ஆணையாளரைப் பார்த்து, ‘‘சார் நீங்க எளிமையாக, ஸ்மார்ட்டாக, இளமையாக இருக்கிறீர்கள், உங்கள் அலுவலகமும் ஸ்மார்ட் ஆக உள்ளது, அதுபோல மதுரை மாநகராட்சியும் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.

ஆணையாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஸ்மார்ட் சிட்டி பணிகள் தோய்வாக நடக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன நிறுத்தமும் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ள கடைகளை வாடகைக்குவிட நடவடிக்கை எடுக்கவில்லை. கடைகளையும், டெண்டர்களையும் ஆன்லைனில் விட வேண்டும். மக்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாயை காட்டிலும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்க வேண்டிய வருவாய் இனங்களை கண்டறிந்து மாநகராட்சி வருவாயை பெருக்க வேண்டும்.

மாநகராட்சி வழங்கும் குடிநீர் குடிக்க உகந்தததாக இல்லை. குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது. குடிநீர் குழாயில் தண்ணீர் வராதபோது கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் குடிநீருடன் கலந்து வீடுகளுக்கு வருகிறது. இந்தப் பிரச்சினை 100 வார்டுகளிலுமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்புக்கு உள்ளாகும் இந்த பிரச்சனையில் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும். பம்பிங் ஸ்டேஷனில் கழிவு நீர் அதிகமாக வரும். கழிவு நீரை எடுக்கும் மோட்டார்களின் உறிஞ்சும் திறன் குறைவாக உள்ளது. அதனால், கழிவு நீர் பாதாளசாக்கடை தொட்டிகள் வழியாக வெளியே வந்து சாலைகள், தெருக்களில் ஆறு போல் ஓடுகிறது.

பெரியாறு அணை, வைகை அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும் மதுரை மாநகராட்சியில் 4 நாள், 3 நாள் மற்றும் 2 நாள் மற்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வருகிறது. அதனால், 24 மணி நேரமும் மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்கக்கூடிய பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சியை சார்ந்தவர்கள் கூட தற்போது மாநகராட்சி செயல்பாடுகளை விமர்சிக்கும் அளவிற்கு குடிநீர் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு, பாதாள சாக்கடை பராமரிப்பு, நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. சாலைகள் முழுவதும் தரமில்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. குப்பைகளை வீடு, வீடாக சேகரிக்காமல் தொட்டிகள் வைத்துள்ளனர். அதில் குப்பைகள் நிறைந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.

1996 ஆம் ஆண்டே அதிமுகவுக்கு 8 கவுன்சிலர்கள் இருந்தபோதே அப்போதைய மேயர் குழந்தைவேலு எதிர்க்கட்சியாக எங்களை அங்கீகரித்து முன்வரிசையில் இருக்கை வழங்கியதோடு அலுவலகமும் தந்தார். ஆனால், தற்போது அதிமுகவிற்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால், மேயர் எங்களுக்கு முறையாக மாநகராட்சி மன்றக் கூட்டரங்கில் இருக்கை ஒதுக்கவில்லை. அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அலுவலகமும் வழங்கவில்லை. வைகை ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு வழிச்சாலை, 3 பூங்கா அமைக்கப்படுகிறது. தற்போது வைகை ஆறு பிரமாதமாக உள்ளது. என்னை கூட நான் மதுரையை சிட்னியாக்குவேன் என்றபோது கேலி கிண்டல் செய்தனர்.

தற்போது மதுரை வைகை ஆற்றை வந்து பாருங்கள். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள். ஆனால், இந்த வைகை ஆறு சாலை தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது. அதனையும் விரைவாக போட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x