Published : 08 Jul 2022 12:26 PM
Last Updated : 08 Jul 2022 12:26 PM

பயணியர் நிழற்குடை இடிப்பு: கரூரில் மக்கள் சாலை மறியல்

கரூர் வடக்குபாளையத்தில் கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டஅப்பகுதி மக்கள்.

கரூர்: பயணியர் நிழற் குடையை இடித்தவர் மீது நடவடிக்கைக் கோரி கரூர் வடக்கு பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

கரூர் வடக்குப் பாளையம் பகுதியில் பயணியர் நிழற்குடை இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு அதனருகே இருந்த இடத்தின் உரிமையாளர் அவரது இடத்தை சீரமைத்தப் போது பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. வடக்குப் பாளையம் பயணியர் நிழற்கு டையை இடித்து அகற்றிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி

கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் வடக்குப் பாளையத்தில் கோரிக்கை பதாகையுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (ஜூலை 8ம் தேதி) காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி கு.தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் போலீஸாரை தரக்குறைவாக விமர்சித்ததால் போலீஸார் அவர்களை கைது செய்ய வாகனத்தில் ஏற்ற முயன்றப் போது பெண்கள் போலீஸாரிடம் கடும் ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பயணியர் நிழற்குடை இடம் குறித்து ஆவணத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அவ்வழியே பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். கவுண்டம்பாளையம் முடக்கு சாலையில் இருந்து பசுபதிபாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x