Published : 08 Jul 2022 09:00 AM
Last Updated : 08 Jul 2022 09:00 AM

கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: வால்பாறை கூழாங்கல் ஆறு, அதிரப்பள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர். (அடுத்தபடம்) வால்பாறை கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு. (கடைசி படம்) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்

தொடர் மழையின் காரணமாக சிறுவாணி, பில்லூர், பிஏபி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறையில் கூழாங்கல் ஆறு, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநகரில் பரவலாக நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால் சாலையோர தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆவாரம்பாளையம், பீளமேடு, காந்திபுரம் ஆகிய இடங்களில் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிக் கிடந்தது. மழைநீர்,கழிவுநீருடன் கலந்து சாலையோரங்களில் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கோவைக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவும் அதிகரித்துள்ளது.

அணையில் கடந்த 4-ம் தேதி 156 மி.மீ, 5-ம் தேதி 110 மி.மீ, 6-ம் தேதி 66 மி.மீ, நேற்று 55 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அடிவாரப் பகுதியிலும் கணிசமான அளவு மழை பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘அணையில் 2 வால்வுகள் நீரில் மூழ்கியுள்ளன. 3-வது வால்வை நீர்மட்டம் நெருங்கியுள்ளது. தற்போது 20.07 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக 100 எம்.எல்.டி அளவுக்கு நீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. அடுத்த 48 நாட்களுக்கு கோவையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க முடியும்,’’ என்றனர்.

பவானி ஆற்றில் வெள்ளம்

காரமடை அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ளபில்லூர் அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் நேற்று நீர்மட்டம் 95 அடியை கடந்தது. விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளதால், நீர் மின் உற்பத்திக்காக, கீழ் மதகுகள் வழியாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானியாற்றில் நேற்று வெளியேற்றப்பட்டது. எந்த நேரத்திலும் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், பவானியாற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

பிஏபி திட்ட முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணைக்கு விநாடிக்கு 5408 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 142.15 அடியாக உயர்ந்தது.

ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந் துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 837 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதே போன்று, பரம்பிக்குளம் அணைக்கு 2721 கன அடி தண்ணீரும், ஆழியாறு அணைக்கு 814 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

வால்பாறையில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால், கருமலை பகுதியில் உள்ள இறைச்சல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வால்பாறையில் இருந்து அணலி எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடை மீது அமைந்துள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தேயிலை பறிக்க சென்ற 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரும்பி வரமுடியாமல் தவித்தனர். இதையடுத்து தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வால்பாறை - 52, சோலையாறு - 71, மேல்நீராறு - 87, கீழ்நீராறு - 56, பரம்பிக்குளம் - 25, ஆழியாறு – 5.4, காடம்பாறை - 13, பெருவாரிப்பள்ளம் - 29, தூணக்கடவு - 23, பொள்ளாச்சி - 10.

கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கோவையில் மாவட்ட ஆட்சியர் (0422-1077 / 0422-230114), மாநகராட்சி அலுவலகம் (0422-2302323/ 8190000200) ஆகிய இடங்களில் மழைக்கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி அலுவலகங்களான வால்பாறை (04253-222394), பொள்ளாச்சி (04259-220999), மேட்டுப்பாளையம் (04254-222151), மதுக்கரை (0422-2511815), கூடலூர் (0422-22692402), கருமத்தம்பட்டி (0421-2333070), காரமடை (04254-272315) ஆகிய இடங்களிலும் மழைக்கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும்,’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x