Published : 08 Jul 2022 07:00 AM
Last Updated : 08 Jul 2022 07:00 AM
சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகி இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை, பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி காந்திமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு அண்ணாமலை நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சர்.பி.டி.தியாகராய அரங்கில் பாஜக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அண்ணாமலை பேசியதாவது: அம்பேத்கரை சாதி தலைவராக மாற்றியது இங்குள்ள கட்சிகளும், காங்கிரஸும்தான்.
அதை பிரதமர் மோடி உடைத்துள்ளார். மோடியைப் பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு இருக்கிறது? பட்டியலின சமுதாயத்தில் இருந்து உருவான முதல் பட்டதாரி இரட்டைமலை சீனிவாசன். ஆனால், எந்தப் புத்தகத்திலும் அவரைப் பற்றி பாடம் இல்லை.
எனவே, பாடப் புத்தகத்தில் இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.
இளையராஜாவுக்கு எம்.பி. பதவி கொடுத்தது சமூக நீதியல்ல. அந்தப் பதவிக்கு அழகு. நியமன எம்.பி.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களது தனித்தன்மை அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கிண்டியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “மகாராஷ்டிராவில் மக்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சிக்கு வருவதே பாஜகவின் விருப்பம். ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சிக்கு வர பாஜக விரும்பாது. தமிழகத்திலும் ஓர் ஏக்நாத் ஷிண்டே உருவாவார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறு நடந்திருந்தால், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை அமைச்சர் சேகர்பாபு திசை திருப்பப் பார்க்கிறார். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும்.
திமுகவுடன் சேர்ந்ததால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பாஜக தற்போது வளர்ந்துள்ளது. முதலிடத்தை நோக்கிச் செல்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT