Published : 07 Jul 2022 07:27 PM
Last Updated : 07 Jul 2022 07:27 PM

ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு சென்னை செல்லும் காலம் தொலைவில் இல்லை: முறைமன்ற நடுவம் விமர்சனம்

சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் "பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை" என்று சென்னை மாநகராட்சியை முறைமன்ற நடுவம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அம்பத்துாரை சேர்ந்த ஜனார்த்தனம் என்பவர், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் அளித்த புகாரில், "சென்னை பட்டரவாக்கம் பிரதான சாலையில், வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் 26 ஆயிரத்து 371 சதுர அடி நிலத்தை மூன்று நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளன. இதனால், மழைநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்வதற்கு தடைப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதை விசாரித்த முறைமன்ற நடுவர் மாலிக் பெரோஸ் கான் சென்னையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் "பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்லும் தொலைவில் காலம் இல்லை" என்று சென்னை மாநகராட்சியை கடுமையாக முறைமன்ற நடுவம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உத்தரவின் முழு விவரம்.

கடந்த வடகிழக்கு பருவ மழையின்போது பெய்த பெருமழையினால் மழைநீர் சூழ்ந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல், வெள்ள பாதிப்பால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருந்துயருக்கு உள்ளானதை அனைவரும் எளிதில் கடந்து செல்ல முடியாத, மறக்க முடியாத ஒரு துயரச் சம்பவம்.

மனுதாரர் புகாரில் தெரிவித்துள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றியிருந்தால், அப்பகுதி மழைநீர் பாதிப்புக்கு உள்ளாகமல் தவிர்த்திருக்க வாய்ப்பு உள்ளது. மூன்று நிறுவனங்களும் வாய்க்கால் புறம்போக்கில் 26 ஆயித்து 371 சதுர அடி ஆக்கிமித்துள்ளதால், ஏரிக்கு மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. அம்பத்துார் நிர்வாக அலுவலர் ஆக்கிரமிப்பை சுட்டிகாட்டி அறிக்கை அனுப்பியும், மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநகராட்சி அதிகாரிகளின் இச்செயல், ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்து ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் ஏரிக்கு செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சிக்கு உரிமையான நிலங்களை குறிப்பிடும் நில வரைப்படங்கள், பதிவேடுகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்று, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிய வேண்டும்.

இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாநகராட்சிக்கு சொந்தமாக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுபோன்ற ஆக்கிரமிப்புகள், மாநகராட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. கள அலுவலர்கள், உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்காததும் உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத போக்கு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்படுவதையே காட்டுகிறது.

இவ்வாறான ஆக்கிரமிப்புகள் தொடருமானால், புற்றுநோய் பரவுதல் போல் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான பகுதிகளில் நில ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கும் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. மனுதாரர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரிய செயலாகும். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் அனைவரையும் ஆக்கிரமிப்புக்கு பொறுப்பாக்கி, நடைமுறையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x