Published : 07 Jul 2022 03:48 PM
Last Updated : 07 Jul 2022 03:48 PM
சென்னை: “சிலிண்டர் விலை உயர்வு மக்கள் வாழ்க்கை மீது இரக்கமற்ற தாக்குதல்; உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறுக” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை பாஜக மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் எட்டாவது முறையாக விலையை உயர்த்தி, தற்போது 14.2 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு உருளை, நுகர்வோர் ரூ.1068 (ஒரு ஆயிரத்து அறுபத்தெட்டு) கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
மத்திய அரசின் அதிகாரத்துக்கு வரும் நேரத்தில், ''அச்சே தின் ஆனே வாலே'' (இனி நல்ல நாட்கள் வருகின்றன) என மோடி உறுதியளித்தார். ஆனால், எட்டாண்டு காலத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு கோடி சமையல் எரிவாயு நுகர்வோர், மறு உருளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மறுபக்கம் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் தொகை லாபம் அடைந்து வருகின்றன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பெற்று, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறி வருகின்றன.
ஆனால் மாத ஊதியப் பிரிவினர் முதல் தினக்கூலி தொழிலாளர் வரை கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவல், அதன் உருமாறி அலை, அலையாக நோய்த்தொற்று பரவும் சூழலில், வேலையிழப்பு மற்றும் வருமான இழப்பும் தொடர்கின்ற நிலையில் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது, மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதலாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்கு மக்கள் நலனை பலியிட்டு வரும் பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT