Published : 07 Jul 2022 02:02 PM
Last Updated : 07 Jul 2022 02:02 PM
சென்னை: உரம் பதுக்கப்படுவதைக் கண்டறிய மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்ய எடுத்து வரும் நடவடிக்கை வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடப்பாண்டில், பருவமழை மிகவும் சாதகமானதாக இருப்பதாலும், மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜூன் 12 ம் தேதிக்கு பதிலாக தமிழக வரலாற்றில் முதன்முறையாக, மே மாதம் 24ம் தேதியே திறந்து விட்டதாலும், வாய்க்கால்களை உரிய காலத்தில் முழுமையாக தூர்வாரவும் அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக ரூ.61 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் முதல்வர் முன்னதாக நடவடிக்கை எடுத்ததால், நடப்புக் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடி வழக்கத்துக்கும் அதிகமாக 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான உரத் தேவையான 27,340 மெட்ரிக் டன் யூரியா, 10,010 மெட்ரிக் டன் டிஏபி 6,160 மெட்ரிக் டன் பொட்டாஷ், 9,480 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் 22,280 மெட்ரிக் டன் யூரியா, 9,980 மெட்ரிக் டன் டிஏபி, 8,040 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 13,180 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என்ற அளவில் டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி, தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25,310 மெட்ரிக் டன் யூரியா, 20,000 மெட்ரிக் டன் டிஏபி, 13,360 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 34,430 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி பணியினை ஊக்குவிப்பதற்காக அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ், ஏக்கருக்கு ரூ.2466.50 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்களை முழு மானியத்தில் 1,90,000 ஏக்கர் பரப்பளவிற்கு வழங்க வேளாண்மை உழவர் நலத்துறை உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
நடப்பாண்டில் யூரியா மற்றும் டிஏபி உரங்களின் கூடுதல் தேவையினை நிறைவேற்றிட, பிரதி செவ்வாய்கிழமைதோறும், மத்திய அரசின் இணைச் செயலாளர் நடத்தும் காணொலி ஆய்வு கூட்டங்களிலும், கடிதம் வாயிலாகவும் ஜூன் மாதத்திற்கு கூடுதல் ஒதுக்கீடாக 20,000 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 10,000 மெட்ரிக் டன் டிஏபி உரத்தினை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்பிக் உர உற்பத்தி நிறுவனத்தில் 02.07.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, யூரியா உற்பத்தி மற்றும் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்வதை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காக்கிநாடா மற்றும் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்துள்ள இறக்குமதி டிஏபி உரத்தில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்குமாறு, வேளாண்மை இயக்குநர் ஐ.பி.எல் நிறுவனத்தையும், கொரமண்டல் உர நிறுவனத்தையும் கோரியதைத் தொடர்ந்து, கடந்த ஜுன் மாதம் 25-ஆம் தேதியன்று வந்தடைந்த சரக்கு கப்பலிலிருந்து 10,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தினை கூடுதல் ஒதுக்கீடாக வழங்கியுள்ளது.
மாவட்டவாரியாக வழங்கப்பட்ட உரம், விற்பனை அளவு, தினசரி உர இருப்பு வேளாண்மை இயக்குநரால் தினசரி ஆய்வு செய்யப்படுகிறது. உரத் தேவையின் அடிப்படையில், மாவட்டங்களை கண்டறிந்து அதற்கேற்ப உர விநியோகத்தை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பிரதி வாரம் வியாழக்கிழமை அன்று மாநில அளவில் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள், உரக் கடை விற்பனையாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர்களுடன், உர விநியோகம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உரங்களை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வேளாண்மை இயக்குநர் , துறையின் அனைத்து நிலை உயர் அலுவலர்களும் உர விற்பனை மையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு உர விற்பனையினைக் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது சாகுபடிப் பரப்பு அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதால், தமிழ்நாட்டில் உரப்பதுக்கல், செயற்கையாக உரப் பற்றாக்குறையை உருவாக்குதல் மற்றும் உரத்தட்டுப்பாடு ஏதும் நிகழாவண்ணம் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு, திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளவும் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 12,513 மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் சிறப்பு ஆய்வுக் குழுவினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 42 உரக் கடைகளின் உரிமம் தற்காலிகமாகவும் 5 உரக்கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கலவை உரங்களை தயார் செய்வதற்கு பதுக்கப்பட்ட 184 மெ.டன் உரங்கள் கைப்பற்றப்பட்டு 5 கலவை உர உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மாவட்டங்களின் தேவைக்கேற்ப ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்திட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிடும்போது, சாகுபடி செலவு அதிகமாவதோடு, பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT