Published : 07 Jul 2022 01:33 PM
Last Updated : 07 Jul 2022 01:33 PM

ஓசூர் | “எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு...” - தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை

ஓசூர்: ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18) ஓசூரில் உள்ள தனியார் பள்ளி படித்து வந்த இவர் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார். அதனைத்தொடர்ந்து முரளி கிருஷ்ணா கடந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வும் எழுதியுள்ளார். ஆனால் 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் தேர்வில் தோல்வியுற்றார்.

இதனையடுத்து மாணவர் முரளி கிருஷ்ணா இந்த ஆண்டும் நீட் போட்டி தேர்வை எழுதுவதற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பின் மூலம் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை வீட்டுக்குச் சென்ற முரளி கிருஷ்ணா, வீட்டிலிருந்த தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதை கண்ட அவரது பெற்றோர்கள் கதவை தட்டி அவரை அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் எந்த சப்தமும் கொடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது அறையினுள் முரளி கிருஷ்ணா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்

இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் விசாரணையில் அப்போது மாணவன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா, என்னால நீட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா, நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன், ஆனா மெடிக்கல் சீட் வாங்கற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது, நான் இந்த முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுமா, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேம்மா என அவர் தனது தாய்க்கு கடிதம் எழுதி உள்ளார்.

மாணவர் இறப்பு குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x