Published : 07 Jul 2022 12:40 PM
Last Updated : 07 Jul 2022 12:40 PM
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்சினை சாதி ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28-ம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை, எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென" மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT