Published : 07 Jul 2022 12:17 PM
Last Updated : 07 Jul 2022 12:17 PM

சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் போராடுவாரா? - வைகோ கேள்வி

வைகோ | கோப்புப் படம்.

சென்னை: விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மே மாதம் ரூ. 1018.50 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று ஜூலை 6, 2022 இல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1068.50 ஆக ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி இருக்கிறது. 19 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை ரூ.358.50. அதாவது 50.44 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

இந்த விலை உயர்வுக்கு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவும் காரணம் என்று ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது. 2014 மே மாதம், மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற போது, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410.50 ஆக இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 658 ரூபாய் அதிகரித்து, தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.1068.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர். தற்போது ஜூலை 6, 2022 ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 113.50 டாலரிலிருந்து 102 டாலராக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குத்தான் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022 ஜூலை மாதமும் இருக்கிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு விலையை உருளை ஒன்றுக்கு ரூ.410 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆனால் தொடர்ச்சியாக மக்களை வாட்டி, வஞ்சித்து வரும் மோடி அரசு, சமையல் எரிவாயு விலையை ரூ.1068.50 ஆக அதிகரித்து, மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே வருவது கண்டனத்திற்குரியது. சமையல் எரிவாயு மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம் என்று மோசடியான திட்டத்தைச் செயல்படுத்திய மத்திய அரசு, மானியத்தை ரூ. 300லிருந்து தற்போது வெறும் ரூ.24ஆக குறைந்துவிட்டது.

தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ந்து உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடிப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர், சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவாரா?

சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்தை அதிகரிக்க வேண்டும்; விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x