Published : 07 Jul 2022 11:28 AM
Last Updated : 07 Jul 2022 11:28 AM
கோவை: கோவை மாநகர காவல்துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிய காவலர்கள் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறை ஐஜி அந்தஸ்த்திலான ஆணையர் தலைமையில் இயங்குகிறது. 4 துணை ஆணையர்கள், 12-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 35-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என ஏறத்தாழ 2,200 பேர் பணியாற்றுகின்றனர்.
பொதுவாக காவல்துறையை பொறுத்தவரையில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல், தேர்தல் சமயங்களிலும், அப்போதைய சூழலை பொறுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, கோவை மாநகர காவல்துறையில் காவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாலும், சிலர் 3 ஆண்டுகளைக் கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றுவதாகவும், இதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைதல், ஒரு தரப்புக்கு அனுசரணையாக நடத்தல் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மாநகர உளவுத்துறையில் 10 ஆண்டுகளைக் கடந்தவர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுவதாகவும் புகார்கள் எழுந்தன.
புகார்களை தொடர்ந்து நடவடிக்கை
இதுகுறித்த புகார்களை அறிந்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 3 ஆண்டுகளை கடந்து ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்களை பணியிட மாற்றம் செய்ய துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ''உளவுத்துறை அல்லாத மற்ற பிரிவுகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், உளவுத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒரே இடத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை மொத்தம் 202 காவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநகர காவல்துறையில் 202 காவலர்கள் நேற்று (ஜூலை 6-ம் தேதி) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 76 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 97 தலைமைக் காவலர்கள் அடங்குவர். மீதமுள்ளவர்கள் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக்காவலர்கள் ஆவர். குறிப்பாக, உளவுத்துறையைச் சேர்ந்த 15 பேர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்,'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT