Published : 14 May 2016 02:41 PM
Last Updated : 14 May 2016 02:41 PM
அதிமுக கூட்டணியில், தேமுதிக வேட்பாளர் கே. தினகரன், தன்னை எதிர்த்த திமுக கூட்டணி வேட்பாளரும் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் செயலாளருமான ஈ.ஆர். ஈஸ்வரனை 29 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த தொகுதி சூலூர். தொகுதி மறுசீரமைப்பின் மூலம் கடந்த 2011 தேர்தலில்தான் முதல் தேர்தலை சந்தித்தது இந்த தொகுதி.
சூலூர், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த முழுக்க கிராமப்புறங்களையே உள்ளடக்கிய இந்த தொகுதியில் கவுண்டர் சமூகத்தவர் பெரும்பான்மையினராக உள்ளனர். அடுத்த நிலையில் அருந்ததியர், நாயக்கர், ஒக்கலிககவுடர், தேவர் உள்ளிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் பருத்தி, கரும்பு, தென்னை மற்றும் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட தானியங்கள் விளைந்த பூமி. கடும் வறட்சியால் விவசாயம் பாழ்பட்டுப்போக விவசாயிகள் பெரும்பகுதியினர் விசைத்தறிகளுக்குத் தாவினர்.
இப்படி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இங்கு இயங்கி வரும் நிலையில், நெய்த துணிக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. உற்பத்தி செய்த துணிகளுக்கு நிலையான சந்தை இல்லை. ஜவுளி உற்பத்தியாளர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படாதது என அதற்கான தொடர் போராட்டங்கள் உண்ணாவிரதம் என சந்தித்துள்ளது இத் தொகுதி. இதுமட்டுமல்லாது, கோழிப்பண்ணை தொழில் பிரச்சினை, திருச்சி சாலை காங்கயம் பாளையம் பகுதியிலிருந்து அகலப்படுத்தாதது, விவசாயிகள் பிரச்சினை மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள்தான் இங்கு வெற்றியை தீர்மானிக்கப்போகிறது என்பதை படித்த மக்கள் பலர் இங்கே தெளிவாகச் சொல்கிறார்கள்.
பாஜகவில் எஸ்.டி.மந்திராசலம், பாமகவில் பி.கே.கணேசன், கொமதேகவில் எம்.காளிசாமி என பல்வேறு கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் தேமுதிக, திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சி வேட்பாளர்கள் பற்றித்தான் தொகுதிக்குள் பேச்சு.
மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆதரவுடன் தேமுதிக சிட்டிங் எம்எல்ஏ கே.தினகரனே மீண்டும் களத்தில் இருக்கிறார். இவர் 5 ஆண்டு காலமாக தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளின் போராட்டங்களில் முன்நின்றுள்ளார் என்பதை தவிர வாக்காளர்களிடம் இவர் மீது பெரியதொரு கருத்தோட்டத்தைக் காணமுடிவதில்லை.
இவருக்கு அடுத்ததாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி.மனோகரன் களத்தில் நிற்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் என்ற முறையில் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட திமுவினர் தானாக முன்வந்து இவர் வெற்றிக்குப் பாடுபடுவதை காணமுடிகிறது.
இவரை எதிர்க்கும் அதிமுக வேட்பாளர் கனகராஜ். கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து வருபவர். இவரது எளிமையாக பழகும் போக்கு, இவருக்காக கட்சித் தொண்டர்கள் பாரபட்சமின்றி களத்தில் இறங்கி வாக்குகள் சேகரிப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால் எதிர்க் கட்சியினரோ, ‘5 ஆண்டுகளாக மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து வந்தவர். இதுவரை அவர் எந்த ஊராட்சிக்கும் சென்றதாக கேள்விப்பட்டதே இல்லை. உள்ளாட்சி மன்றத்தில் மிகப்பெரும் பொறுப்பை வைத்துக் கொண்டு மக்களை சரிவர அணுகாதவர், எம்எல்ஏவானால் மட்டும் என்ன செய்யப்போகிறார்?’ என்று கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
மக்களின் அடிப்படை பிரச்சினை, தொழில்பிரச்சினைகள் என கூடுகட்டி கும்மி அடிப்பது சிட்டிங் எம்எல்ஏ தேமுதிக தினகரனுக்கும், ஆளுங்கட்சி வேட்பாளர் கனகராஜுக்கும் பெரும் தலைவலியாக உள்ளதாகவே தெரிகிறது. அதற்காக, காங்கிரஸ் வேட்பாளர் வென்று விடுவாரா என்றால் அதுவும் சுலபமில்லை. திரும்பின பக்கமெல்லாம் இரட்டை விரல் உயர்த்தும் வாக்காளர்களை பார்க்கும்போது பிரதான கட்சிகள் சமபலத்தில் உள்ளதாகவே தெரிகிறது. எனினும், வெற்றி வேட்பாளர் யார் என்பது வாக்காளர் முடிவில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT