Published : 06 Jul 2022 06:27 PM
Last Updated : 06 Jul 2022 06:27 PM
நாமக்கல்: “திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தனித் தமிழ்நாடு கேட்போம் என பேசியது கண்டிக்கத்தக்கது” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் பாஜக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ''கடந்த 3ம் தேதி நாமக்கல்லில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு பேசும்போது, தவறு செய்பவர்கள் மீதும், கட்டுப்பாட்டை மீறுவோர் மீதும் சர்வாதிகாரியாக மாறி கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மத்திய அரசின் இதே நிலைப்பாடு நீடித்தால் மீண்டும் பெரியார் கொள்கையை கையில் எடுத்து தனித் தமிழ்நாடு கேட்போம் என்று பாரத பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் எச்சரிக்கை செய்து பேசினார். இந்தியாவில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசிய எம்பி ராசாவின் பேச்சைக் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் இருந்தே திமுகவுக்கு ஏழரை ஆரம்பமாகவிட்டது. பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடித்தோ, வலியுறுத்தியோ தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்த முடியாது, கட்சியும் நடத்த முடியாது என்பதை சவால் விட்டுக் கூறுகிறேன். ஆன்மிக உணர்வுகளை மதிக்கும் தமிழகத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை திமுக வலியுறுத்தினால் அதை பாஜக எதிர்க்கும்.
கோயில் நிலத்தை மீட்டுள்ளோம் என்று கூறும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அது குறித்து விபரங்களை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். தேர்தலின்போது வெளியிட்ட அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 15 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். ஆனால் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பொய் கூறிவருகிறார். அதனால் தான் டிசம்பர் 31-க்குள் தமிழக அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை நடைப்பயண பேராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்துவோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT