Published : 06 Jul 2022 06:03 PM
Last Updated : 06 Jul 2022 06:03 PM
கோவை: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பு பெண் நிர்வாகியை கோவை போலீஸார் கைது செய்தனர்.
ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தொடர்பான போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து மக்கள் வணங்கும் கடவுளை கொச்சைப்படுத்துவதாக கூறி, அந்தப் புகைப்படத்துக்கு இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செல்வபுரம் அருகேயுள்ள சொக்கம்புதூரைச் சேர்ந்த சேனா இந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
மிரட்டல் வீடியோ வெளியிட்ட சரஸ்வதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், செல்வபுரம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் தகாத வார்த்தையில் பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சரஸ்வதி மீது செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, இன்று (ஜூலை 6-ம் தேதி) அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT