Published : 06 Jul 2022 05:08 PM
Last Updated : 06 Jul 2022 05:08 PM

சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை

இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகனங்கள் அதிகரிப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் தொடர்ந்து பாலங்கள் கட்டப்பட்டு கொண்டே வருகின்றன. இதற்கு தமிழகம் விதி விலக்கும் அல்ல.

ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்துள்ளார். முக்கியமாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் சாலை விரைவில் அமையவுள்ளது.

அண்ணா சாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம்

இதில், அண்ணா சாலையில் தற்போது முழுமையாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்படி பேருந்து, மெட்ரோ ரயில் என்று பொதுப் போக்குவரத்து தேவைக்கு அதிக அளவு உள்ள சாலைகளில் பாலங்கள் கட்டுவது ஒரு நகரத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற கருத்தையும் இங்கே நிராகரித்துவிட முடியாது.

அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நகர்புற பொறியியல் துறை போராசிரியர் கே.பி. சுப்பிரமணியன்

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நகர்புற பொறியியல் துறை போராசிரியர் கே.பி.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, " அண்ணா சாலையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது. தற்போது அந்த சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. இது பொதுமக்களுக்கு பயன் அளிக்காது.

இது போன்ற மேம்பாலங்கள் கார் போன்ற வாகனங்களுக்குதான் பயன்படும். இந்த சாலையில் பாலம் கட்டினால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் விரயம்தான் ஆகும்.

தேசிய நகர்புற போக்குவரத்து கொள்கையின் முக்கிய நோக்கமே பொது போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில் என்று பொது போக்குவரத்தை நோக்கி மக்கள் வருமாறு திட்டங்கள் இருக்க வேண்டும்.

இந்தப் பாலங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. ஒரு இடத்தில் உள்ள பிரச்சினையை மற்ற இடங்களுக்கு திருப்பி விடும். ஒரு பிரச்சினைக்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வைக் கண்டறிய வேண்டும். தற்காலிக ஏற்பாடு செய்யக் கூடாது. பாலங்கள் கட்டுவதும் அடிமட்டத்தில் தீர்வைத் தராது. தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்" என்று அவர் கூறினார்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பாலங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை அளிக்ககுமா என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது "தென் கொரியாவின் சியோல் நகரத்தில் 15 அதிவிரைவு நெடுஞ்சாலைகள் அகற்றப்பட்டு மாற்று திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்துகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15% அதிகரித்தது. மெட்ரோ பயன்பாடும் அதிகரித்தது. சென்னையும் சியோல் நகரத்திலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

புதிய புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை ஒரு சிக்னலிலிருந்து இன்னொரு சிக்னலுக்கு மாற்றுமே ஒழிய, நெரிசலை குறைக்க முடியாது. உதாரணமாக, சென்னை வடபழனி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், நெரிசலை லட்சுமண் ஸ்ருதி சந்திப்பிற்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான்.

பொதுப் போக்குவரத்தை அதிகரித்து, பல்வேறு போக்குவரத்து முறைகளுக்குள் தடையற்று மாறிச் செல்வதை உறுதிபடுத்துவதுதான் நெரிசலையும், மாசுபாட்டையும் குறைக்கும்" என்றார்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x