Published : 06 Jul 2022 03:55 PM
Last Updated : 06 Jul 2022 03:55 PM

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர மற்றும் பெருந் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், அமைச்சர் தங்கம்தென்னரசு முன்னிலையில் பன்நோக்கு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் முதல் தவணை பெற்றவர்கள் 94.61 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணை பெற்றவர்கள் 85.39 சதவீதம் ஆகும். அரசு மற்றும் தனியார் கரோனா மையங்களில் 5ம் தேதி வரை மொத்தமாக 11,42,32,983 டோஸ்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 14,60,303 டோஸ்கள் முன்னெச்சரிக்கை தவணையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 30 மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் முலம் 4,44,20,222 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு தடுப்பூசி மையங்கள் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை அளித்து வருகிறது.

மேலும் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

கரோனா 4 ஆம் அலை எதிர்கொள்ளும் வகையில், பெரு மற்றும் குறு தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பயனடையும் வகையில் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

அனைவரும் முழுமையான தடுப்பூசி போடும்வரை, கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பாக இல்லை. கரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைக்கோர்ப்போம்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x