Published : 06 Jul 2022 03:33 PM
Last Updated : 06 Jul 2022 03:33 PM

வேளச்சேரியில் தூய்மைப் பணியாளர் இறந்தது தற்செயல் விபத்தல்ல; அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்: தமிழக பாஜக

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: வேளச்சேரியில் தூய்மைப் பணியாளர் உயிரிழந்த நிலையில், சாலைகளில் தோண்டிய பள்ளங்களால் நேரும் விபத்துகளைத் தடுத்திட முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை வேளச்சேரியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, முறையாக புதைக்கப்படாத புதைவட கம்பியில் கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு தற்செயலான விபத்தல்ல. அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள கொடூர மரணம். கொலை.

இறந்துபோன அந்தப் பணியாளரின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீட்டை அரசு வழங்குவதோடு, இதற்கு கரணமான துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய தண்டனையை பெற்று தர வேண்டும். இனி இதுபோன்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் இருக்கக் கூடிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பாதுகாப்பற்ற முறையில், உரிய விதிகளை பின்பற்றாமல், அலட்சியமாக பள்ளங்களைத் தோண்டி நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று கிடக்கும் அவலநிலை நிலவி வருகிறது. ஏற்கெனவே ஒரு வங்கி அதிகாரி உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பல விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் சென்னை மாநகராட்சிக்கு உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, மேலும் விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் நேராதவாறு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x