Published : 06 Jul 2022 02:26 PM
Last Updated : 06 Jul 2022 02:26 PM
சென்னை: "திமுக நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பாஜகவை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள். தமிழக பாஜகவை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பாஜகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் திமுக வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்படும் என்று நேற்று நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற வகையில் மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிற வகையில் நாள்தோறும் சாதனை பட்டியல்களை படைத்து வருகிறது.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ரூபாய் 5.5 லட்சம் கோடி கடனை சுமந்து கொண்டு தான் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். அத்தகைய கடன் சுமையின் பின்னணியில் தான் வெளியிடப்பட்ட 2875 கொள்கை ரீதியிலான அறிவிப்புகளில் 87 சதவிகிதத்திற்கும் மேலான அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களது நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்பு கோரி 5 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.
அவற்றில் தற்போது 1 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு ஓராண்டிற்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொண்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி வழங்கி வருகிற மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது ?
நேற்று நடைபெற்ற பாஜக போராட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக திமுக கூறி 15 மாதங்களில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பேசியிருக்கிறார். கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் ஒன்னேகால் லட்சம் கோடி முதலீட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு 75 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதோடு, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதனால் தான் அதிமுக ஆட்சியில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்றைக்கு மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. இது இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய நற்சான்றிதழாகும். இதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் நியாயத்தின் அடிப்படையில் விமர்சிக்காமல் இருக்கலாம் அல்லவா ? ஆனால், அதை பாஜகவிடம் எதிர்பார்க்க முடியாது.
2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது. தொழில் வளர்ச்சி முடக்கத்தின் காரணமாக வேலையிழப்பு, வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி 5 கட்ட விரி விதிப்பை அமல்படுத்தி தவறான ஜிஎஸ்டி மூலம் மக்களை பாஜக அரசு கசக்கிப் பிழிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், உடுத்தும் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. கடலை மிட்டாய், பிஸ்கெட், அச்சிடுவதற்கு பயன்படும் மைகள், கத்தி, பென்சில், ஷார்ப்பனர், எல்இடி பல்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி காசோலைகளுக்கு வரி 18 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அப்பளம், பன்னீர், தயிர், மோர், தேன், இறைச்சி, உலர் காய்கறிகள், பொரி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாய பம்பு செட்டுகளுக்கு கூட 18 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மக்களும் விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறைமுக வரியான ஜிஎஸ்டியை உயர்த்துவதால் நேரடியாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், கார்ப்பரேட்டுகள் நலனில் அக்கறையுள்ள மோடி அரசு வருமான வரியையோ, கார்ப்பரேட் வரியையோ இதுவரை உயர்த்தாமல் அதற்கு மாறாக சலுகைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.
திமுக நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT