Published : 06 Jul 2022 12:41 PM
Last Updated : 06 Jul 2022 12:41 PM

சென்னை | மழை நீர் வடிகால் பணியை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் 

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கீ.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்றும் 3 மாதங்களே உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கவும், பணி நடைபெறும் இடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றி பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருசில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பணிகளை மேற்கொண்டு வரும் ஆர்.பி.பி. எண்டர்பிரைசஸ், பி.என்.சி. நிறுவனம், பி. பாஸ்கர் எண்டர்பிரைசஸ், ஜுனிதா எண்டர்பிரைசஸ், சண்முகவேல் எண்டர்பிரைசஸ், அபண்டா எண்டர்பிரைசஸ், ஜி.கே. எண்டர்பிரைசஸ், போஷன் எண்டர்பிரைசஸ் ஆகிய 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்திற்காக இரண்டு நிறுவனத்திற்கு காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x