Published : 06 Jul 2022 11:18 AM
Last Updated : 06 Jul 2022 11:18 AM
விழுப்புரம்: திண்டிவனத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு பணிச்சுமை காரணமா? என போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றிவந்தார். விழுப்புரம், கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் பணி முடிந்து சதீஷ்குமார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என்று அவரது மனைவி கேட்டுள்ளார்.
அதற்கு பணி முடித்துக்கொண்டு வரும்போதே விஷம் குடித்துவிட்டு வந்ததாகக் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது திருச்சி அருகே உயிரிழந்தார். இறந்த சதீஷ்குமாருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.
இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளர்களை அலுவலகப்பணிக்கு அழைக்க தலைமை பொறியாளர் உத்தரவிடவேண்டும் என்பது விதி. ஆனால் அந்தந்த துணை மின் நிலைய அதிகாரிகள் தன்னிச்சையாக பணியை மாற்றி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மின் விநியோகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் களப்பணிக்கு அனுப்ப மின்வாரிய நிர்வாகம் முடிவெடுத்தது.
இதனால் அனைவரும் கடந்த சில நாட்களாக களப்பணிக்கு, அலுவலக பணியில் உள்ளவர்களை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் சில பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் குரல் கொடுத்துள்ளது. இதனால் தனக்கான பணியினை உடனுக்குடன் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.
இதனால் பணிச் சுமை அதிகமாகி, மனதளவில் பலவீனப்பட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும் தனிப்பட்ட பிரச்சினைகளா என்றும் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வாகாது
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT