Published : 06 Jul 2022 09:10 AM
Last Updated : 06 Jul 2022 09:10 AM
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி 2-வது நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமூகத்தினரை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத் தில் பழங்குடியின ஜாதி சான்றிதழ் கேட்டு குருமன்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நெடுங்காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பழங்குடி இன ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய்த் துறையினர் முன்வரவில்லை. ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று முன் தினம் தொடங்கினர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். அவர்கள், தங்களது கலச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் பயன்படுத்தி வரும் பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அப்போது அவர் களிடம் கோட்டாட்சியர் வெற்றிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், உள்ளிருப்பு போராட்டம் 2-வது நாளாக நேற்று தொடர்ந்தது. கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே தங்கியிருந்து, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் வழிதடத்தில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முனைப்பு காட்டியது. இதையொட்டி, வேலூர் டிஐஜி ஆனி விஜயா தலைமையிலான காவல்துறையினர், போராட்டக் குழுவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது. காவல்துறையினரின் எச்சரிக்கையை குருமன்ஸ் சமூகத்தினர் பொருட்படுத்தவில்லை. மேலும் அவர்கள், பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான குருமன்ஸ் சமூகத்தி னரை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT