Last Updated : 14 May, 2016 02:41 PM

 

Published : 14 May 2016 02:41 PM
Last Updated : 14 May 2016 02:41 PM

காவிரி பாயும் மேட்டூர், இடைப்பாடி தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?- எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்

தமிழகத்தை வளமாக்கும் காவிரி பாயும் மேட்டூர், இடைப்பாடி தொகுதியில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைக்கு இத்தேர்தல் மூலம் தீர்வு கிடைக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் 1,34,338 ஆண் வாக்காளர்களும், 1,28,384 பெண் வாக்காளர்களும், திருநங்கயைர் 18 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,62,790 வாக்காளர்கள் உள்ளனர். மேட்டூரில் டெல்டா மாவட்ட விவசாயத்தை செழுமையாக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையுள்ளது.

ஆனால், இத்தொகுதியில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும் கொளத்தூர், நங்கவல்லி, சுரக்காமடுவு, கோணூர், கீரனூர், கூனான்டியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இன்று வரை காவிரி நீர் கிடைக்காமல் நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் அவலம் உள்ளது. மேலும் மேட்டூர் அணை உபரி நீரை சரபங்கா நதியுடன் இணைத்து 18 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற வைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேட்டூர் தண்டா பகுதியில் தோனிமடவு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறாமல் கானல்நீராகவே உள்ளது.

இதுதவிர, மேட்டூரைச் சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டால் கேன்சர் உள்ளிட்ட நோய் தாக்கத்தால் தொகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்கள் காரணமாக சாலைகள் பழுதடைந்து சாலை போக்குவரத்து தொகுதி மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இடைப்பாடி தொகுதி

இடைப்பாடி தொகுதியில் 1,33,756 ஆண் வாக்காளர்களும், 1,27,369 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 12 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,61,137 வாக்காளர்கள் உள்ளனர். கொங்கணாபுரத்தில் பருத்தி அதிகளவு விளைந்தாலும், திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு கூட்டுறவு வேளாண் பருத்தி உற்பத்தி சங்கம் இயங்கி வருகிறது. கொங்கணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு பருத்தி உற்பத்தி சங்கத்தை இயக்க வேண்டும்.

இக்கோரிக்கை தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாக இருந்தாலும், நிறைவேறாமல் இருப்பது தொகுதி மக்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது. மேட்டூர் அணை உபரி நீர் - சரபங்கா நதி இணைப்பு திட்டம் மூலம் பாசன வசதி, குடிநீர் தேவை இந்த தொகுதியில் பூர்த்தியாகும்.

பூலாம்பட்டியை சுற்றுலா தளமாக்குவோம் என தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சை நம்பி நம்பி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் பொதுமக்கள் தேர்தலுக்கு பின்னர் அது நிறைவேறாமல் போவதும் தொடர்ந்து வருகிறது. இத்தொகுதியில் சரபங்கா நதி கழிவுநீர் தேங்கும் மையமாக மாறியதால், பொதுசுகாதார சீர்கேட்டால் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தலில் வெற்றிபொறுவோர் உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மேட்டூர் மற்றும் இடைப்பாடி வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x