Published : 06 Jul 2022 05:28 AM
Last Updated : 06 Jul 2022 05:28 AM
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் பணிகள் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கிராம சபைகளை போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்துக்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-ல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்காததால் இந்த சட்டம் 12 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
இதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பி வந்தது. கடந்த பிப்ரவரியில் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினேன்.
தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT