Published : 21 May 2016 05:35 PM
Last Updated : 21 May 2016 05:35 PM
மதுரை, விருதுநகர் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள 36 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 232 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 141 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஐஜேகே 45, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 24, கொங்குநாடு ஜனநாயகக் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டன.
பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது பெரிய கூட்டணியாக களமிறங்கிய மக்கள் நலக் கூட்டணியைவிட ஓட்டு சதவீதம் கூடுதலாகப் பெற்று பாஜக ஆறுதல் அடைந்துள்ளது.
நாகர்கோவில், குளச்சல் ஆகிய தொகுதிகளில் பாஜக 40 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், விளங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் அதிமுகவை 3-ம் இடத்துக்கு தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறியது.
பத்மநாபபுரம், வேதாரண்யம், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கு அதிகமாகவும், கன்னியாகுமரி, கவுண்டம்பாளையத்தில் 20 ஆயிரத்துக்கு அதிகமாகவும், விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், கோவை, வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் 15 ஆயிரத்துக்கு அதிகமாகவும், துறைமுகம், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தாம்பரம், மேட்டுப்பாளையம், பல்லடம், சூலூர், கிணத்துக்கடவு, பட்டுக்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் பாஜக ஓட்டு வாங்கியுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளில் திருவாடானை, பரமக்குடியில் 3-ம் இடமும், 22 தொகுதிகளில் 4-ம் இடமும், உசிலம்பட்டியில் 5-ம் இடமும் பிடித்தது. எஞ்சிய இடங்களில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகள் பெற்றது.
இந்த 6 மாவட்டங்களில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.ஆர்.மகாலெட்சுமி 16069 ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் கண்ணன் 15,029 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளார். திருவாடனை தொகுதியில் பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். தனிக் கட்சி நடத்தி பின்னர் பாஜகவில் இணைந்த பி.டி.அரசகுமார் முதுகுளத்தூர் தொகுதியில் 5408 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மகா சுசீந்திரன் (மதுரை கிழக்கு), கார்த்திக்பிரபு (மத்தி), சசிகுமார் (தெற்கு), ஆறுமுகம் (திருப்பரங்குன்றம்), பார்த்தசாரதி (திருவில்லிபுத்தூர்), காமாட்சி (விருதுநகர்), செல்லம் (பெரியகுளம்) ஆகிய பாஜக வேட்பாளர்கள் 5 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT