Published : 05 Jul 2022 07:21 PM
Last Updated : 05 Jul 2022 07:21 PM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், காரைக்காலில் ரூ.80 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் அண்மை நாட்களாக 1000-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து காலராவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி இன்று (ஜூலை 5) காரைக்கால் வந்தார். திருநள்ளாறு சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை பார்வையிட்டு, சுத்திகரிப்பு மற்றும் குளோரின் கலப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வயிற்றுப் போக்கால் சிகிச்சைப் பெற்று வருவரோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காலரா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''மாவட்டத்தில் காலரா பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குடிநீர் தேக்கத் தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எதிர் காலத்தில் இதுபோல நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். ரூ.50 கோடி செலவில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலக்காமல் இருக்க கழிவு நீர் வாய்க்கால்கள் அனைத்தும் சிமென்ட் கட்டுமான வாய்க்கால்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் ரூ.80 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மக்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இங்கு வரக் கூடாது என்பதல்ல. ஓராண்டு காலத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை. இனிமேல் அடிக்கடி வருவேன். புதுச்சேரிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி தேவை என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏக்கள் நாஜிம், சிவா, மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஓராண்டுக்குப் பின் காரைக்கால் வந்த முதல்வர்: முதல்வராக பொறுப்பேற்றப் பின்னர் என்.ரங்கசாமி காரைக்காலுக்கு வரவேயில்லை என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினராலும் கடுமையாக வைக்கப்பட்டு வந்தது. காலரா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் விமர்சித்திருந்த நிலையில் முதல்வர் இன்று காரைக்கால் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது புகார் கூறிய பாஜகவினர்: காலரா தடுப்பு குறித்து முதல்வர் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியான பாஜகவினர் முதல்வரிடம் அதிகாரிகள் மீது சரமாரியாக புகார்கள் கூறினர். புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பலர் சர்வீஸ் பிளேஸ்மண்ட் அடிப்படையில் காரைக்காலில் ஊதியம் வாங்கிக் கொண்டு புதுச்சேரிக்கு சென்று பணியாற்றுவதாகவும், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு பணிக்கு வரக்கூடிய அதிகாரிகள் உரிய நாளில் பணிக்கு வருவதில்லை எனவும், எதற்கெடுத்தாலும் நிதியில்லை என்று காரைக்காலில் உள்ள அதிகாரிகள் கூறி வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT