Published : 05 Jul 2022 05:40 PM
Last Updated : 05 Jul 2022 05:40 PM
சென்னை: “தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளையும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டிப்பதாகக் கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அண்ணாமலை பேசியது: "பெட்ரோல், டீசல் வரியை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். 5 ரூபாய், 4 ரூபாய் குறைப்பதாக கூறியிருந்தனர். பெட்ரோலில் மட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளனர். டீசலில் 1 ரூபாய் கூட குறைக்கவில்லை, பெட்ரோலில் 2 ரூபாய் குறைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7 மாதங்களில் பெட்ரோல் விலையை இரண்டு முறை குறைத்து, 14 ரூபாய் 50 காசு வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் 17 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அருகாமையில் எனது வீடு உள்ளது. புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய், தமிழகத்தில் பெட்ரோல் விலை 102 ரூபாய் 71 காசு. 6 ரூபாய் வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் டீசலின் விலை 94 ரூபாய், புதுச்சேரியில் 86 ரூபாய், 8 ரூபாய் குறைவாக இருக்கிறது.
1967-க்குப் பின்னர் வந்த திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டி என்று கூறும் நீங்கள், உத்தரப் பிரதேசத்தையும், பீஹாரையும் பின்தங்கிய மாநிலம் என்று கூறும் திமுக அரசு, உத்தரப் பிரதேசத்தில் 12 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளபோது, திமுக அரசால் ஏன் குறைக்க முடியவில்லை? நீங்கள் பின்தங்கியதாக கூறும் மாநிலங்கள் தமிழகத்திற்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கின்றன.
நீங்கள் பின்தங்கியிருப்பதாக கூறும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் உட்பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட, பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளன. அப்படியென்றால், இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையென்று தானே அர்த்தம். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொல்லவில்லை; ஆனால், குறைத்துள்ளனர்.
ஆனால், நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளதை நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம். அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம். அதற்காகத்தான் கோட்டையை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினோம், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை கூற இக்கட்சியின் மாநிலத் தலைவராக நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 3 லட்சத்து 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று 9 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எதற்காக... பணம் சம்பாதிப்பதற்காக, பணம் வாங்கிக் கொண்டு அந்த ஆசிரியர் பணியிடங்களை விற்பனை செய்வதற்காகத்தான்.
தமிழகத்தில் நாம் சாதாரண எதிரிகளை எதிர்க்கவில்லை. பெரும் எதிரிகள், பெருச்சாளிகள். பணத்தை கையிலே வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைபேச முடியும் என்று நினைக்கக்கூடியவர்கள். எந்தத் தேர்தல் வேண்டுமானாலும் நடக்கட்டும், கடைசியில் 1000 ரூபாய் பணம்தானே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கக்கூடிய தமிழகத்தில், பாஜக 25 எம்பிக்களை கொண்டு வருவோம் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதனால், இது கனவாக மட்டும் சென்றுவிடக் கூடாது, சங்கல்பமாக எடுக்க வேண்டும். 25 எம்பிக்கள் இங்கிருந்து வந்து அமரும்போதுதான், 150 எம்எல்ஏக்களுடன் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வரும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்கிறீர்கள்.
டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு கொடுக்கிறோம். உங்களுடைய 505 தேர்தல் வாக்குறுதிகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற முடியவில்லை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாதி கடைகளை மூடவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரை ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, சென்னை கோபாலபுரத்தில் முடித்துவைப்போம்.
இந்த பாதயாத்திரையை மாநிலத் தலைவர் என்ற முறையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடந்துசென்று, 77 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் சென்று, 365-வது நாள் குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக கோபாலபுரத்தில் அந்த பாதயாத்திரை முடியும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT