Published : 05 Jul 2022 03:05 PM
Last Updated : 05 Jul 2022 03:05 PM
புதுச்சேரி: “பெண்கள் உறுதியானவர்களாக இருத்தல் அவசியம். அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் என்னை ஈர்த்தது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்) ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 75 பள்ளிகளைப் பார்வையிட்டு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் முயற்சியின் ஒரு பகுதியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் உள்ள ஐந்து பள்ளிகளை இன்று பார்வையிட்டார். முதலில் லப்போர்த்து வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டார்.
காலை 9 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என அறிவித்திருந்த துணைநிலை ஆளுநர் காலை 11 மணிக்குதான் அங்கு வந்தார். அதுவரை குழந்தைகள் காத்திருந்தனர். கல்வித்துறை இயக்குநர் ருத்ர கௌடு, இணை இயக்குநர்(பள்ளிக் கல்வி) சிவகாமி உள்ளிட்டோர் காலை முதல் பள்ளி வளாகத்தில் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து ஆளுநர் தமிழிசை விழாவில் பேசியது: "மாணவர்களிடையே தேசப் பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியதுதான் முதல் கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தயக்கத்தை உடைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பதுதான் நல்லது. ஆசிரியர்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.
தாய், தந்தையர் கவனிக்கவில்லை என புகார் கூறக்கூடாது. உங்களுக்கே பொறுப்பு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரை தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் காந்தியை தெரியும், அவரோடு சுதந்திரத்துக்காக பணியாற்றியவர்களை அறிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களுக்கு உத்வேகம் தருவோர் யார் என்று மாணவி ஹரிணி கேட்டதற்கு, "முதலில் என் அம்மா-அப்பா, அதையடுத்து ஆசிரியர்கள், தலைவர்கள் உள்ளனர். என் அம்மாவிடம் அன்பையும், தந்தையிடம் இருந்து படிக்கவும், பேசவும் கற்றேன். ஆசிரியர்களிடமிருந்து வாழ கற்றேன். தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து அனுபவங்களை கற்றேன். நாட்டுக்கு உழைப்பதை பிரதமர் மோடியிடம் கற்கிறேன்.
பெண்கள் உறுதியானவர்களாக இருத்தல் அவசியம். பாரதியின் அச்சமில்லை வரிகளே உதாரணம். அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் என்னை ஈர்த்தது" என்று குறிப்பிட்டார்.
மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, "உங்களுக்கு படித்த சுதந்திர போராட்ட தலைவர் யார் என கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த ஆளுநர், "அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT