Published : 05 Jul 2022 09:15 AM
Last Updated : 05 Jul 2022 09:15 AM
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைவாழ் மக்களே போட்டியிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு எஸ்சி சமுதாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனால் அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும், யாரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என பொதுமக்கள் முடிவு செய்தனர். அதையும் மீறி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கிராம மக்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால், அப்போது நடக்க இருந்த நாயக்கனேரி மலை ஊராட்சி மன்ற 9 வார்டுகள், நாயக்கனேரி மலை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது, அந்த பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றம் 8 மற்றும் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த விஜியா என்பவர் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய ஊரில் ஜூலை 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறவுள்ளது. அந்த திருவிழாவுக்கு ஒவ்வொரு குடும்பமும் தலா ரூ.1,000 வழங்க ஊர் நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர்.
ஊர் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிட விஜியா மனு தாக்கல் செய்துள்ளதால் அவரிடமிருந்து கோயில் திருவிழாவுக்கு பணம் வசூலிக்கக் கூடாது எனவும், அவரிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் தண்ணீர், மின் இணைப்பு தடை செய்யப்படும். மேலும் தொடர்பு வைத்துக் கொள்பவர்களும், விஜியாவுக்கு வாக்களிப்பவர்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
விஜியா குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என ஊர் கட்டுப்பாடு போட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது விஜியாவின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையிலும், தேர்தல் விதிமுறையை மீறி வாக்களிப்பவர்களை மிரட்டியும், விஜியா மற்றும் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டியுள்ள சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வேட்பாளர் விஜியா நேற்று புகார் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT