Published : 05 Jul 2022 05:10 AM
Last Updated : 05 Jul 2022 05:10 AM

பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், எழும்பூரில் பிரெய்லி வரைபடங்கள்

சென்னை: பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை கோட்டத்தில் முதல்முறையாக பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரலில் ரேனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை எழும்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்துள்ளன. ரயில் நிலையத்தின் நடைமேடைகள், மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்த பிரெய்லி வரைபடம் மூலமாக அறியலாம்.

இந்த வரைபடம், பார்வை குறைபாடுள்ள பயணிகள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாங்களே ரயில் நிலையத்துக்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர, இந்த பிரெய்லி வரைபடத்தில் ‘கியூ ஆர் கோடுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியைத் தெரிந்து கொள்ளலாம்.

பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற, நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டுணரும்படியான டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x