Published : 05 Jul 2022 06:45 AM
Last Updated : 05 Jul 2022 06:45 AM
சென்னை: சைபர் குற்றங்களில் விரைந்து துப்பு துலக்க, சென்னை மண்டலத்தில் புதிதாக ‘சைபர் கிரைம்’ காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் கிடைக்கும் வசதிகளும் ஒருபுறம் அதிகரிக்கின்றன. அதற்கேற்ப ஹேக்கிங் செய்து, தனிநபர் அந்தரங்கம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவது போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
சமீபகாலமாக ஏடிஎம் கார்டு மோசடி, ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ஆன்லைனில் பணத்தை திருடுவது, முகநூல், வாட்ஸ்அப், ஆன்லைன் ஷாப்பிங், மேட்ரிமோனியல், போலி இ-மெயில், வங்கியில் இருந்து பேசுவதாக மோசடி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி நூதன பண மோசடி என சைபர் குற்றங்களின் பட்டியல் நீள்கிறது. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள், தனிநபர் அவதூறுகள், வதந்திகள் ஆகியவையும் அதிகரித்துள்ளன.
இவற்றை தடுக்கவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்யவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 காவல் மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் கிரைம் காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையில், சென்னையில் சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கு முதன்முதலாக ஐபிஎஸ் அதிகாரியான துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 7-வது மாடியில் தற்காலிகமாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர இடம் வழங்கப்பட உள்ளது.
சைபர் கிரைம் காவல் நிலையங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த தனி காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் அனைத்து காவல் மாவட்டங்களிலும் ஏற்கெனவே ஒரு சைபர் கிரைம் பிரிவு உள்ளது.
இதுதவிர, சென்னை மத்திய குற்றப்பிரிவில் தனியாகசைபர் கிரைம் காவல் நிலையம் செயல்படுகிறது. இது மட்டுமின்றி, சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், பணியாற்ற திறமையான போலீஸார் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள 104 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக நன்கு தெரிந்த தலா 3 போலீஸார் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காவல் நிலையங்களில் சைபர் கிரைம் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால், அதன் தன்மைக்கு ஏற்ப காவல் நிலையம் அல்லது, துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றத் தடுப்பு பிரிவு அல்லது புதிதாக தொடங்கப்பட உள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தவாறு கைவரிசை காட்டுகின்றனர். அவர்களில் 10-ல் ஒருவர் மட்டுமே பிடிபடுகின்றனர். மோசடி செய்த பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வதும் சவாலாக உள்ளது.
எனவே, சைபர் குற்ற வழக்குகளில் சிக்கிய அனைவரையும் கைது செய்வது, பொருட்களை மீட்பது, சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்வது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு சைபர் கிரைம் போலீஸார் செயல்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தவாறு கைவரிசை காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT