Published : 05 Jul 2022 04:20 AM
Last Updated : 05 Jul 2022 04:20 AM
கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சேலம் மண்டல தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அரசுப் பேருந்துகளில் மாணவ, மாணவிகள், பெண்களுக்கு கட்டணம் இலவசம் என்பதால் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற தமிழக அரசின் அறிவிப்புகாரணமாக, அரசு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த வழித்தடங்களில் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கெங்கு பேருந்துகள் தேவை என்பதை அறிய அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வங்கியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். அரசு விடுமுறை நாட்கள், திருவிழா காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலவச பயணத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் பெண்கள் 132 கோடி பயணங்களை மேற்கொண்டனர். தமிழக அரசு இதற்கு இழப்பீடாக ரூ.1,600 கோடியை ஏற்கெனவே போக்குவரத்துத் துறைக்கு வழங்கியுள்ளது. கூடுதலாக தேவைப்படும் நிதியை தமிழக அரசிடம் கேட்டுப் பெறுவோம். கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி, நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ராமகிருஷ்ணன், மண்டல பொது மேலாளர் லஷ்மண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT