Published : 04 Jul 2022 06:56 PM
Last Updated : 04 Jul 2022 06:56 PM
புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் காலரா பாதிப்பு தொடர்பாக நேரடி ஆய்வுக்கு முதல்வர் ரங்கசாமி செல்லாததற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸும், கூட்டணிக் கட்சியான அதிமுகவும் விமர்சித்துள்ளன.
காரைக்காலில் குடிநீர்க் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும், சுகாதாரமற்ற குடிநீரைப் பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது. காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் காலரா பரவியுள்ளது. அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் உள்ளோர் எதைப் பற்றியும் ஒரு மாதமாக கவனிக்கவில்லை.
குறிப்பாக, சுகாதாரத் துறையை தன்னிடத்தில் வைத்திருக்கக்கூடிய முதல்வர் ரங்கசாமி, இதுவரை இது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். அது மட்டுமல்ல, காரைக்கால் பகுதியில் நேரடியாக ஆய்விற்கும் செல்லாமல் இருக்கக்கூடிய வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
கூட்டணிக்கட்சியான அதிமுக எதிர்ப்பு
புதுவை கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காரைக்கால் மாவட்ட மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு என காலராவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதை மூடி மறைக்கும் வகையில் இணை நோய்களால் இறந்துவிட்டதாக சுகாதாரத் துறையினர் பூசி மெழுக பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு புதுவை அரசின் நிர்வாக சீர்கேடும், நிர்வாக திறமையின்மையுமே காரணம்.
காரைக்கால் மாவட்டமே சுகதார சீர்கேட்டில் சிக்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் சென்று ஆய்வு, நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. தேர்தலின்போது, தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் காரைக்காலுக்கு சென்று மக்களை சந்திப்பது முதல்வருக்கு அழகல்ல. இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மத்திய சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்துக்கு மருத்துவக்குழுவை அனுப்பி ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலராவால் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கும் புதுவை அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT