Published : 04 Jul 2022 05:27 PM
Last Updated : 04 Jul 2022 05:27 PM
மதுரை: மதுரை - திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் உள்பட அதிமுகவினர் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள திருமங்கலம் கப்பலூரில் விதிமுறையை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் டோல்கேட் அமைத்துள்ளது. 60 கி.மீ., இடைவெளியிலே நான்கு வழிச்சாலையில் டோல்கேட் அமைக்க வேண்டும். அதனால், விதிமுறையை மீறி அமைத்த இந்த டோல்கேட்டை அகற்ற கோரி திருமங்கலம் சுற்றுவட்டார 50 கிராம மக்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு சமீப காலமாக உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் டோல்கேட் வசூல் செய்யாமல் இருந்தது. ஆனால், இந்த டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒத்தக்கடையில் கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், சென்னையில் இருந்த டோல்கேட்களை அகற்ற நடவடிக்கை எடுத்த முதல்வர், கப்பலூர் டோல்கேட் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த டோல்கேட்டில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசு 60 கிலோமீட்டருக்குள் இருக்கும் டோல்கேட் அகற்றப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கப்பலூர் டோல்கேட் அருகில் திறந்தவெளியில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் டோல்கேட்டை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், கப்பலூர் தொழில்பேட்டை பேட்டை தலைவர் ரகுநாதராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் அதிமுக தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பி.உதயகுமார், அதிமுகவின் 200 பேரை கைது செய்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடி அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த கப்பலூர் டோல்கேட் தென் தமிழகத்தின் நுழைவு பகுதியாக உள்ளது. ஆகவே அந்த முன்னுரிமை அடிப்படையில் இதை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT