Published : 04 Jul 2022 03:54 PM
Last Updated : 04 Jul 2022 03:54 PM

சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வருகிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வடஅமெரிக்க தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: “இறை நம்பிக்கையில் தலையிடமாட்டோம்; தமிழர்களை பிளவுபடுத்த மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையான 'ஃபெட்னா' மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான 'ஃபெட்னா' அமைப்பைச் சார்ந்த - அதன் அமைப்பாளர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் உலகத் தமிழ்ப் பீடம் விருதையும் அளிக்க இருக்கிறீர்கள். 2020-ஆம் அண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருதை மறைந்த இலக்கியச் செம்மல் 'தமிழ்கோ இளங்குமரனார்' அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டுக்கான விருதை மாபெரும் தமிழ்க்கவி 'ஈரோடு தமிழன்பன்' அவர்களுக்கும் வழங்குவதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் பரிசுத்தொகை 15,000 அமெரிக்க வெள்ளி, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய். இந்தச் சிறப்புக்குரிய விருது தகுதிசால் அறிஞர்களுக்கு தரப்பட இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கக்கூடிய இளங்குமரனார் மறைந்தபோது, அவருக்கு தமிழக அரசு - அரசு மரியாதை வழங்கியது என்பதையும், அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் உங்கள் எல்லோருக்கும் நான் நினைவூட்டுகிறேன்.

அதேபோல், இந்த ஆண்டுக்கான எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் வழங்கும் திட்டத்தில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் வீடு பெறுகிறார். போற்றப்பட வேண்டிய ஆளுமைகளை நீங்கள் போற்றுகிறீர்கள். உங்கள் தேர்வுக் குழுவை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். இத்தகைய அமிழ்தினும் இனிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். உலகில் மூத்த இனமான தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் நாம். இத்தகைய மொழிப்பெருமையும் - இனப்பெருமையும் கொண்டவர்கள் நாம். அத்தகைய பெருமையுடனும் பெருமிதத்துடனும்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினம்தான். நம்முடைய இனம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இது குறித்து தமிழக சட்டப்பேரவையிலேயே நான் விரிவாகப் பேசியிருக்கிறேன்.

வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள், வாழ்வதற்காகச் சென்றார்கள், வேலைகள் தேடிச் சென்றார்கள், கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள், தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள், புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள்.

- இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அத்தகைய தாய்வீடாம் தமிழகத்தில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம்பெருமையோ, இலக்கியக் கற்பனையோ மட்டுமல்ல, அது வரலாற்றுப் பூர்வமானது. இத்தகைய வரலாற்றை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மிக மிகப் பொருத்தமானது. கீழடியில் கிடைத்த சான்றுகள்தான், இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதைக் கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியிருக்கிறது.

அதேபோல், சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட - உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. 1150 எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. 'தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்வழி ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம்.

இந்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த நான் உத்தரவிட்டிருக்கிறேன். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுகள் இப்போது சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. சங்ககாலத் துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகியவை அன்றைய தமிழ் நிலத்தில் முக்கியப் பங்காற்றின. அவற்றையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறோம்.

சிலர் தங்களது வரலாற்றை கற்பனையான கதைகளின் மூலமாக வடிவமைக்கிறார்கள். நாம் அப்படி அல்ல! வரலாற்றுத் தரவுகள் அடிப்படையில் உறுதிசெய்துதான் அறிவிக்கிறோம். ''இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு, மேற்காணும் அகழாய்வுகளும், முன்களப் புலஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்" என்றும் தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இதனைச் செய்வதற்குக் காரணம் - ஏதோ பழம்பெருமை பேசுவதற்காக மட்டுமல்ல. பழம்பெருமை பேசுவது தவறும் இல்லை. நாம் ஏன் பழம்பெருமை பேசுகிறோம் என்றால் - பழம்பெருமை நமக்கு இருக்கிறது. அதனால் பேசுகிறோம். நாம் பேசுவது ஏன் சிலருக்குக் கசப்பாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது. தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம்.

அயலகத் தமிழர் மேன்மைக்காக தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்தவர்தான் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காக, வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டது.

'வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்' ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம். அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நம்மால் அதை அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் அதை அமைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நான், 'வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்' அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தேன்.

• பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.
• 5 கோடி ரூபாய் வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி உருவாக்கப்படும்.
• வெளிநாடுவாழ் தமிழர் குறித்த தரவுத் தளம் (Data Base) ஏற்படுத்தப்படும்.
• தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் உள்ள - கல்வி பயிலக்கூடிய குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
• தமிழர்கள் புலம்பெயரும்போது, பயணப் புத்தாக்கப்பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.
• ஆலோசனை பெற வசதியாக, கட்டணமில்லாத் தொலைபேசி வசதி மற்றும் வலைத்தளம், கைப்பேசிச்செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும்.
• சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
• தமிழகம் திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக, இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
• வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
• புலம்பெயர்ந்த தமிழர்கள், 'எனது கிராமம்' திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம்.
• புலம்பெயர்ந்தோர் பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
• புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.
- இவை அனைத்துக்கும் 20 கோடி ரூபாயை நான் ஒதுக்கி இருக்கிறேன்.

இவை அனைத்தும் செயல்பாட்டிற்கு படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தேன். கடந்த ஜனவரி-12 அன்று அது கொண்டாடப்பட்டது. கரோனா காலமாக இருந்ததால், காணொலி மூலமாக அது முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

• கீழடி உள்ளிட்ட ஆய்வுகளின் மூலமாக நமது வரலாற்றை மீட்டெடுப்பது
• எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை நடைமுறைப்படுத்துவது
• உலகளாவிய தமிழினத்தை ஒருங்கிணைப்பது
• தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரைத் துடைப்பது
• தமிழகத்தை அனைத்து மேன்மைகளும் அடைந்த நாடாக வளர்த்தெடுப்பது

ஆகிய ஐந்து மாபெரும் குறிக்கோள்கள் கொண்ட அரசாக நம்முடைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் மிகக் கவனமாகத்தான் இது நம்முடைய அரசு என்று சொல்கிறேன். எனது அரசு என்றோ, திமுக அரசு என்றோ சொல்லவில்லை. 'இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் - ஓர் இனத்தின் அரசாக அமையும்' என்று நான் சொல்லி இருக்கிறேன். சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் - சகோதரத்துவம் - மானுடப்பற்று - தமிழ் மொழிப்பற்று - இன உரிமைகள் - கூட்டாட்சித் தத்துவம் - மாநில சுயாட்சித் தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய திராவிடவியல் ஆட்சியியல் கோட்பாட்டை கடந்த 100 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைவர்கள் முன்னெடுத்த சமூக - பொருளாதார - அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நான் வடிவமைத்திருக்கிறேன். திராவிடம் என்ற சொல்லைத் திட்டமிட்டுத்தான், நான் குறிப்பிடுகிறேன். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனப்பெயராக, இடப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. இது ஓர் இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டு காலமாக இருக்கிறது. இன்று ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக - ஒரு கோட்பாட்டின் பெயராக இருக்கிறது.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கோட்பாட்டின் அரசியல் வடிவமாக அது சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் - எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள், இந்த ஆட்சியையும் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லையும் எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான், இவர்களை எல்லாம் தாண்டித்தான் தமிழினம் வளர்ந்திருக்கிறது! வாழ்ந்துகொண்டு இருக்கிறது! எனவே இவர்களை புறந்தள்ளி நாம் வளர்வோம். வாழ்வோம்.

உங்கள் அனைவரது செயல்பாடுகளும் தமிழை, தமிழினத்தை, தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது செயல்கள் அமைய வேண்டும்! தமிழகத்தில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள்! ஒருதாய் மக்களாக வாழுங்கள்! கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள்! எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை - தமிழகத்தை விட்டுவிடாதீர்கள்! இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய இயக்கமானது 'தமிழால் இணைவோம்' என்பதாகும்.

தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாய்மாலங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. மதம் என்று நான் சொல்லும்போது, யாருடைய இறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறை நம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை! விருப்பம்! உரிமை! அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

சாதிக்கு அத்தகைய சமாதானத்தைச் சொல்ல முடியாது. சாதி என்பது தமிழினத்தைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தியாக இருக்கிறது. அதனால்தான் 'சாதியை ஒழித்தல் ஒன்று, தமிழை வளர்த்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாடினார். அதனால்தான், ‘தமிழால் இணைவோம்’என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் - தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம்.

நம்மை நாடுகள் பிரிக்கலாம்! நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே வந்து சந்திப்பேன். நீங்களும் அடிக்கடி தமிழகத்திற்கு வாருங்கள் என்ற அன்பான அழைப்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்!'' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x