Published : 04 Jul 2022 06:05 AM
Last Updated : 04 Jul 2022 06:05 AM
ஈரோடு: ரயான் ஜவுளி விலை குறைந்துஇழப்பு ஏற்பட்டு வருவதால், ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாளொன்றுக்கு ரூ.6 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அண்மைக்காலமாக, நூல் விலை அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,ஏராளமான விசைத்தறிகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. விலையில்லா வேட்டி,சேலை உற்பத்தியும் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் ஈடுபட்டு வந்தன. அண்மைக்காலமாக, ரயான் நூலின் விலை அதிகரித்துள்ள நிலையில், ரயான் ஜவுளி விற்பனை குறைந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
எனவே, நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், ரயான் ஜவுளி உற்பத்தியை வரும் 10-ம் தேதி வரை நிறுத்துவது என விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்து நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்டவிசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால், நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறும்போது, ரயான் நூலின் விலையில் கடந்த ஒரு மாதமாக எவ்வித மாற்றமும் இல்லை. இருந்தபோதிலும், 120 கிராம் எடை கொண்ட ரயான் துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ. 28 ஆக இருந்தது.
இப்போது ரூ.26-க்கு கூட மார்க்கெட்டில் விலை போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. பருத்தி ஜவுளியின் விலையும் குறைந்துள்ளதால், ரயான் துணி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக் கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி நிறுத்தம் காரணமாக தினமும் லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT