Published : 04 Jul 2022 07:08 AM
Last Updated : 04 Jul 2022 07:08 AM
புதுக்கோட்டை: மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி. இவர் தற்போது கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார்.
இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கான பயணச் செலவை மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இதுகுறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து பலரும் இம்மாணவிக்கு உதவி செய்தனர். மேலும், அதற்கான முழு தொகையையும் 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது.
அப்போது, தனக்கு தேவையான தொகை கிடைத்துவிட்டது என்று தொண்டு நிறுவனத்தினரிடம் கூறிய மாணவியிடம், வேறு ஏதாவது உதவி தேவையெனில் கேளுங்கள் என்றதும், “எங்கள் ஊர் மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள்” என்று கேட்டுள்ளார்.
இதை ஏற்ற அந்த நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறையை கட்டிக் கொடுத்தது.
வீடு தேடி உதவி செய்ய வந்தவர்களிடம், எனக்கு உதவி வேண்டாம். ஊர் மக்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுங்கள் என்று கூறிய அந்த மாணவியை பலரும் பாராட்டினர்.
ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மகாராஷ்டிராவில் உள்ள 7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'கனவு மெய்ப்படும்' எனும்தலைப்பில் 4 பக்கத்தில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.
இதை, ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் சமூக அக்கறையானது பிற மாநிலத்தில் பாடமாக அமைந்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் மாணவி ஜெயலட்சுமி கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநில பாடநூலாக்கம் மற்றும் பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தின் 7-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் என்னைப் பற்றிய பாடம் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT