Last Updated : 04 Jul, 2022 05:33 AM

1  

Published : 04 Jul 2022 05:33 AM
Last Updated : 04 Jul 2022 05:33 AM

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் நடந்த திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். (அடுத்த படம்) மாநாட்டில் பங்கேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

நாமக்கல்: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில், திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி.வரவேற்று பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றதற்கு வாழ்த்து

மாநாட்டுக்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்குப் பின்னால் உங்கள் உழைப்பு இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது எத்தகைய சிரமங்களை அடைந்திருப்பர் என்பதை அறிவேன். இந்தியாவில் தலைசிறந்த லாரி கட்டுமானம், கோழிப்பண்ணை என தொழில்வளம் பெற்ற மாவட்டம் நாமக்கல். இத்தகைய சிறப்பு மிகுந்த பகுதியில் இந்த மாநாடு நடக்கிறது.

ஆட்சி மீது நம்பிக்கை

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி. பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகியோர் நகராட்சித் தலைவராகத்தான் தங்களது பயணத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். நான் சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்தேன். மக்கள் பணியில் முதல்பணி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்கள் பணியை நேரடியாக செய்ய முடியும்.

பதவியை மக்களுக்காக பயன்படுத்துங்கள். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி மக்களிடையே நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், பத்திரிகையாளர் நலவாரியம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என எத்தனையோ நல்ல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 78 லட்சம் பேர்மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

பெண்கள், தங்களுக்கு தரப்பட்ட பொறுப்பை கணவரிடம் வழங்காதீர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாக நடந்தால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுக கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் செயலை யாரும் செய்யக்கூடாது.

ஒற்றுமையாக உழைப்போம்

யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலில் தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் பணியை உறுதியுடன் செய்ய வேண்டும். ஒற்றுமையாக இருந்து, ஊருக்காக உழையுங்கள். மக்களின் பாராட்டை பெறுங்கள்.

நமது இயக்கம் தமிழக விடியலுக்காக இருக்க வேண்டும். கடந்த ஓராண்டில் 70 முதல் 80 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது சரித்திரம். நீங்கள் அனைவரும் கட்சிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x