Published : 04 Jul 2022 06:55 AM
Last Updated : 04 Jul 2022 06:55 AM

ஜூலை 11-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ய தீவிர ஏற்பாடு

சென்னை: சென்னையில் ஜூலை 11-ம் தேதிநடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழுவில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்யஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை தேர்வு செய்யஅவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் முயற்சிமேற்கொண்டு வருகின்றனர்.

பொதுக்குழுக் கூட்டத்துக்கான அழைப்புகளை அனுப்புவதுடன், நிர்வாகிகளிடம் இருந்துபழனிசாமியை பொதுச் செயலாளராக்க ஆதரவளிப்பதாகவும், இரட்டைத் தலைமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தும் கடிதங்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பொதுக்குழுவை சட்டரீதியாக தடுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம், ‘‘பழனிசாமி என்ன செய்தாலும், பொதுக்குழு நடைபெற வாய்ப்பில்லை. தலைமைக் கழகஅழைப்பு என்ற பெயரில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பது ஏற்புடையதல்ல. பழனிசாமி சர்வாதிகார மனநிலையில் செயல்படுகிறார்.

ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, மீண்டும் பொருளாளர் மற்றம் அவைத் தலைவர் பொறுப்பில்தான் தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கியது. தற்போது, இரட்டைத் தலைமைசர்ச்சை உள்ளதால், அடுத்தநிலையில் உள்ள பொருளாளருக்குத்தான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது. எனவே, பொருளாளரான ஓபிஎஸ் ஒப்புதலின்றி பொதுக்குழுவைக் கூட்டினால், அது செல்லாது’’ என்றார்.

இந்நிலையில், பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் வாரு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் உள்ளிட்டோர் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 11-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். கடந்தபொதுக்குழுவில் நிராகரித்த தீர்மானங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச் செயலாளர் பதவிக்குஎன்ன அதிகாரம் இருந்ததோ, அதே அதிகாரத்துடன் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும். சட்ட விதிகள்படி நடைபெறும் இக்கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.

தற்போது ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இல்லாததால், தலைமைக் கழக நிர்வாகிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்சி விதிகளுக்கு உட்பட்டு, அவர்கள்தான் பொதுக்குழுவை நடத்துகிறார்கள். எனவே, இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை.

கட்சியில், 99 சதவீத நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர் பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.

தலைமைக் கழகம் என்ற பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று கூற, வைத்திலிங்கத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது? 99 சதவீத நிர்வாகிகள் இங்குள்ளோம். வெறும் ஒரு சதவீத ஆதரவை வைத்துக்கொண்டு, அவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை, பொதுக்குழுவில் யார்பேசுவது, தீர்மானங்களை முன்மொழிவது யார் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், அரசு, தனியார் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கும்படி பெங்களூரு புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருவேளை பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டால், ஆன்லைனில் பொதுக்குழுவை நடத்துவது குறித்தும் பழனிசாமி தரப்பு ஆலோசித்து வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால், பழனிசாமியை பொதுச் செயலாளராக்குவதில் சிக்கல் உருவாகலாம் என்பதால், எப்படியாவது பொதுக்குழுவை நடத்தி, தீர்மானத்தை நிறைவேற்ற பழனிசாமி தரப்பு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x