Published : 04 Jul 2022 07:36 AM
Last Updated : 04 Jul 2022 07:36 AM

ஆளுநரைவிட முதல்வருக்கே அதிக அதிகாரம் உள்ளது: பழ.நெடுமாறன் கருத்து

மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்.

திருவாரூர்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே, ஆளுநரைவிட அதிக அதிகாரம் உள்ளது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் உதவிப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், அந்த உதவிப் பொருட்கள் அனைத்தும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகின்றனவா என்பதை உற்றுநோக்க வேண்டும்.

உதவிப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்கினால் அனைத்துதரப்பினருக்கும் சமமாக சென்றடையும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்.

மக்கள் வாக்களித்து, வெற்றி பெற்ற பிறகு, பணம், பதவி பெறும்நோக்கத்தில் வேறு கட்சிக்கு மாறுகின்ற நடவடிக்கை ஜனநாயகப் படுகொலையாகும். எனவே, தேர்தலில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று வேறு கட்சிக்கு மாறினால், உடனடியாக அந்தப் பதவி பறிபோகும் அளவுக்கு கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு தேர்வு செய்து வழங்கும் 3 பிரதிநிதிகளில் ஒருவரை ஆளுநராக மாநில அரசு தேர்ந்தெடுக்கும் என்றுதான் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த நடைமுறை நாளடைவில் பின்பற்றப்படவில்லை.

தற்போது, பாஜகவினர் அல்லது பாஜக சார்புடையவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பாஜகவின் கொள்கைகளை முழங்கிவருகின்றனர். இதுபோன்ற அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே, ஆளுநரைவிட அதிக அதிகாரம் உள்ளது.

தமிழ்த் தேசியம் என்பது பாஜகவின் கொள்கைக்கு முற்றிலும் நேர்எதிரானது. தமிழ்த் தேசியம் பேசுவோர், மொழி வழியாக சுயாட்சி உரிமை, தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றனர்.

ஆனால், பாஜக ஒரே நாடு, ஒரே மொழிஎன்ற கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது. எனவே, தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் பாஜகவின் 'பி' டீம் எனக் கூறுவது அறியாமை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x