Published : 09 May 2016 10:00 AM
Last Updated : 09 May 2016 10:00 AM

சுற்றுலா தலங்களால் அழியும் தமிழக சோலைக் காடுகள்: பாதுகாக்க வன ஆர்வலர்கள் வேண்டுகோள்

புல்வெளிகள், பசுமைமாறாக் காடு கள் ஒருங்கிணைந்து காணப்படுவது சோலைக் காடுகள். இந்த வகைக் காடுகள் கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் காணப்படுகிறது. சோலைக்காடுகளின் தட்பவெப்ப நிலை, தனித்துவமான மண் அமைப் புகளை செயற்கையாக உருவாக்க முடியாததால் இந்த வகை காடுகள் தொல்லுயிர் படிமங்கள் என அழைக் கப்படுகின்றன.

தமிழகத்தில் நீலகிரி (முதுமலை, முக்குர்த்தி), பழநி மலை (கொடைக் கானல்), கோவை (ஆனை மலை) மற்றும் திருநெல்வேலி (அகஸ்தியர் மலை) ஆகிய பகுதியில் மட்டுமே சோலைக் காடுகள் அரிதாக காணப்படுகின்றன. தேனி மாவட் டம் மேகமலை வனப்பகுதியில் சிறிதளவு காணப்படுகின்றன.

மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படி யான மழைப்பொழிவால் பெறப்படும் நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது. இது தாவர இலைகளால் அமைக்கப்பெற்ற ஓர் அடுக்கு. இந்த அடுக்கில் சேமிக்கப்பட்ட தண்ணீரானது, சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு சிறு சிறு ஓடைகளாக, மிகப்பெரிய அருவிகளாக, ஆறுகளாக உருமாறு கின்றன. இந்த காடுகளில் அதிகப் படியான தாவர இனங்களும், ரோடோடென்ரான், ரோடோமிர்ட்ஸ், இம்பேஸியன்ஸ், எக்ஸாகம் உள் ளிட்ட சில தாவர இனங்களும் காணப்படுகின்றன.

விலங்குகளில் மரத்தவளை, வரையாடு, யானை, பாம்புகள், கருமந்தி, தேவாங்கு, மர அணில், சிறுத்தை, கரடி, கடமான், காட்டுக் கோழிகள் மிகுந்த அளவு காணப் படுகின்றன.

சோலைக் காடுகளின் பரவல் குறைவதால் படிப்படியாக இவ் வகை காடுகள் தொல்லுயிர் படிமங் களாகி வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி கிராமம் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு கூறியதாவது:

மலைப்பகுதிகளில் வளர்க்கப் படும் கால்நடைகளின் மூலம் பெரும்பகுதியான புல்வெளிப் பகுதிகள் மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகின்றன. சுற்றுலா தலங்கள், விவசாய நிலங்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள் சாகுபடி மற்றும் அனுமதி இன்றி காட்டு மரங்களை வெட்டுதல் போன்றவற்றின் மூலமும் சோலைக் காடுகள் பாதிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு களைச் செடிகள், மரங்கள் சோலைக் காடுகளின் பரவலை மிகப் பெரிய அளவில் தடுத்து, அதன் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. அதனால், சோலைக் காடுகள் சிறிது சிறிதாக பாலைவனமாக மாறி வருகின்றன. இதனால், சோலைக் காடுகளை நம்பி வாழும் வன உயிரினங்களின் இடம்பெயர்வு அதிகமாக காணப் படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர். ராமசுப்பு

பாதுகாப்பது எப்படி?

சோலைக் காடுகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வனத்துறை பல்வேறு திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை.சோலைக் காடுகளையும், அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கலாம். வனப்பகுதிகளில் கால்நடைகளின் மேய்ச்சலைத் தடுத்து வனநிலங்களைப் பாதுகாத்து வன உயிரினங்களையும் அதைச் சார்ந்த வனப்பகுதிகளையும் பாதுகாக்கலாம். அந்நிய களைச் செடிகள், மரங்களை ஒழித்து அதன் மூலம் பரவும் விதை முளைத்தலை தடுக்கலாம்.

காட்டுத்தீயை தடுப்பதோடு, தேயிலை, காபி பயிரிடப்படுவதற்காக சோலைக் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கலாம். பைன், யூகலிப்டஸ், அகேசியா வகை மரங்களை முற்றிலும் வனப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தலாம். சோலைக் காடுகளில் இருக்கும் சுற்றுலா தலங்களை தடை செய்து, உயிர்த் தொழில்நுட்பத்தின் மூலம் சோலைக் காடுகளின் மரங்களை பெருக்கம் செய்யலாம் என்கிறார் ராமசுப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x